/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொட்டித்தீர்க்கும் மழை; வேகமாக நிரம்பும் நீர்நிலைகள் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
கொட்டித்தீர்க்கும் மழை; வேகமாக நிரம்பும் நீர்நிலைகள் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொட்டித்தீர்க்கும் மழை; வேகமாக நிரம்பும் நீர்நிலைகள் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொட்டித்தீர்க்கும் மழை; வேகமாக நிரம்பும் நீர்நிலைகள் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 29, 2025 12:21 AM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி, வால்பாறையில் தொடர்ந்து பெய்யும் கனமழையினால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த 24ம் தேதி முதல், பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடும் கோடை வெயில் காரணமாக வறண்டு காணப்பட்ட நீர் நிலைகளுக்கு, தொடர் மழை காரணமாக நீர் வரத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, தேவம்பாடிவலசு குளம், ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணாகுளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்பி வருகிறது.
இதேபோல, கிராமப்புறங்களில் ஆங்காங்கே உள்ள குட்டைகளும் நிரம்பி வருவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மானாவாரி பகுதிகள் மட்டுமின்றி, கிணறு மற்றும் குளங்கள் வாயிலாக பாசன வசதி கொண்ட விவசாயிகள், விவசாய பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். கிராமப்புறங்களில், நீர்நிலைக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை சீரமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
கால்வாய் அடைப்பு
பொள்ளாச்சி, ஜமீன் ஆதியூர் கிராமத்தில் இருந்து வெளியேறும் மழைவெள்ளம், அங்குள்ள விநாயகர் கோவில் எதிர்புறம் உள்ள தாழ்வான பகுதியைச் சென்றடைகிறது. அதன்பின், ஜமீன்காளியாபுரம் - -பொள்ளாச்சி சாலையில் உள்ள பாலத்தை கடந்து, பள்ளத்தில் சேர்ந்து, மேற்கு நோக்கி பயணிக்கிறது.
பாலத்தின் கீழுள்ள இடைவெளியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடியிருப்புகளுக்குள் வெள்ளம் செல்கிறது.
விவசாய பகுதியில் இருந்து மழை நீர் வெளியேறும் பகுதியில் உள்ள அடைப்புகளால், தண்ணீர் வெளியேற வழியின்றி, விவசாய நிலத்தில் தேங்கியுள்ளது. ஆக்கிரமிப்புகள், நீர் நிலை கால்வாயில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் கடந்த ஐந்து நாட்களாக, தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்கிறது. காற்றுடன் கனமழை பெய்வதால், நடுமலை எஸ்டேட், சோலையாறுடேம் செல்லும் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று, மரங்களை அப்புறப்படுத்தினர்.
சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று முன்தினம் காலை, 45.15 அடியாக நீர்மட்டம் இருந்தது. தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 59.69 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம், 14 அடி உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 3,889 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது.
இதே போல், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 31.90 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,478 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழையளவு
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:
சோலையாறு - 105, பரம்பிக்குளம் - 102, ஆழியாறு - 3, வால்பாறை - 64, மேல்நீராறு - 146, கீழ்நீராறு - 50, காடம்பாறை - 9, மேல்ஆழியாறு - 3, சர்க்கார்பதி - 22, வேட்டைக்காரன்புதுார் - 25, மணக்கடவு - 67, துணக்கடவு - 71, பெருவாரிப்பள்ளம் - 75, நவமலை - 4, பொள்ளாச்சி - 65, நெகமம் - 64, பெதப்பம்பட்டி - 40 என்ற அளவில் மழை பெய்தது.