/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு அணை, ஆற்றுப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை; அசம்பாவிதங்களை தடுக்க ஆய்வு
/
ஆழியாறு அணை, ஆற்றுப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை; அசம்பாவிதங்களை தடுக்க ஆய்வு
ஆழியாறு அணை, ஆற்றுப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை; அசம்பாவிதங்களை தடுக்க ஆய்வு
ஆழியாறு அணை, ஆற்றுப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை; அசம்பாவிதங்களை தடுக்க ஆய்வு
ADDED : மே 20, 2025 11:42 PM

பொள்ளாச்சி; ஆனைமலை அருகே, ஆழியாறு அணை உள்பகுதி, ஆறுகளில் சுற்றுலா பயணியர் செல்ல நிரந்தர தடை விதிப்பது குறித்து, வால்பாறை டி.எஸ்.பி., தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆனைமலை அருகே, ஆழியாறு மற்றும் சுற்றுப்பகுதிக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
ஆழியாறுக்கு வருவோர், அணை உள்பகுதி, ஆறு மற்றும் தடுப்பணைகளில் ஆபத்தை உணராமல் குளிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.அவ்வாறு குளிக்கும் போது, சுழல் மற்றும் ஆழம் தெரியாமல் செல்வதால் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. கல்லுாரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என பலரும், ஆபத்தறியாமல் நீரில் இறங்கியபோது இறந்துள்ளனர்.
இதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; கம்பிவேலிகள் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று வால்பாறை டி.எஸ்.பி., பவித்ரா, நீர்வளத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். ஆழியாறு அணைப்பகுதிக்குள் சுற்றுலா பயணியர் செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ஆறு, தடுப்பணை பகுதிகளை பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தனர்.
அணையின் உள்பகுதி மற்றும் ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா பயணியர் செல்வதை தடுக்க நீர்வளத்துறை மற்றும் கோட்டூர் பேரூராட்சி சார்பில், தடுப்பு வேலிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. விடுமுறை நாட்களில், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணியர் செல்வதை தடுக்க, போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.