/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
/
குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
ADDED : ஆக 11, 2025 08:50 PM

வால்பாறை; வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்த நிலையில், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில், தென்மேற்கு பருவமழை பெய்யத்துவங்கியது. தொடர் மழையால் ஜூன் மாதம், 26ம் தேதி, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நிரம்பியது. இதனையடுத்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இடைவிடாமல் பெய்த கனமழையால் இந்த ஆண்டு ஐந்து முறை சோலையாறு அணை நிரம்பியது. தொடர் மழையால் வால்பாறையில் உள்ள ஆறு மற்றும் அருவிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதே போல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கும் சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வால்பாறையில் மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து சாரல்மழை பெய்கிறது. இதனால், நீர்வரத்தும் குறைந்துள்ளது. ஆனாலும், சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதி வழங்கவில்லை. இதனால் வார விடுமுறையில் வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைகின்றனர்.
சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில், நேற்று காலை 159 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,139 கனஅடி தண்ணீர் வரத்தும், 1,493 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றமும் இருந்தது.

