/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
/
பவானி ஆற்றுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜன 18, 2024 01:21 AM

மேட்டுப்பாளையம், : காணும் பொங்கலை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஆபத்தான பகுதிகளுக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், இளைஞர்களை, போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் பலரும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்து மகிழ வருகின்றனர்.
பவானி ஆற்றில் பில்லூர் அணை, பம்பிங் ஹவுஸ்களில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடும் போது, தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
வேகமும் அதிகமாக இருக்கும். அப்போது பவானி ஆற்றில் குளிப்பவர்கள் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
மதுபோதையிலும் சிலர் குளிக்கின்றனர். பவானி ஆற்றில் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க கோவை ரூரல் எஸ்.பி.,பத்ரி நாராயணன் லைப் கார்ட்ஸ் திட்டத்தை கடந்த வருடம் துவக்கினார்.
லைப் கார்ட்ஸ் போலீசார் பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகள் என கண்டறியப்பட்ட, வெள்ளிப்பாளையம் பாயிண்ட் 1, 2, 3, சிறுமுகை, ஆலாங்கொம்பு, ராமர் கோவில், அம்மன் பழத்தோட்டம், வச்சினம்பாளையம், வேடர் காலனி, ஊமபாளையம், கல்லார் கார்டன், தூரி பாலம், ரயில்வே கேட், எஸ்.எம். நகர் வாட்டர் டேங், சமயபுரம் செக்டேம், வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, பம்ப் ஹவுஸ், குண்டுகல் துறை, விளாமரத்தூர் என 19 இடங்களில் 24 மணி நேரமும் தீவிர ரோந்து மேற்கொண்டு, அங்கு அத்துமீறி குளிப்பவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர்.
காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் என பவானி ஆற்றில் குளிக்க படையெடுத்தனர். அவர்களை லைப் கார்ட்ஸ் பிரிவு போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
மேலும் பரிசல்கள் வாயிலாகவும் பவானி ஆற்றின் பல்வேறு இடங்களிலும் அத்துமீறி யாராவது குளிக்கிறார்களா என ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே போலீசார் வேறு இடங்களுக்கு ரோந்து சென்றதும், தடையை மீறி சிலர் அத்துமீறி கல்லார் தூரி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் குளித்தனர்.
போலீசார் மீண்டும் வந்ததும் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.---