/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடுமுறையில் திரண்ட சுற்றுலா பயணியர்
/
விடுமுறையில் திரண்ட சுற்றுலா பயணியர்
ADDED : டிச 25, 2024 09:57 PM

பொள்ளாச்சி; தொடர் விடுமுறை காரணமாக, பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவிக்கு, அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிந்தனர்.
பொள்ளாச்சி அடுத்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலையில் முக்கிய சுற்றுலா தலங்களாக ஆழியாறு அணை, பூங்கா, ஆற்றுப்படுகை மற்றும் கவியருவி பகுதிகள் உள்ளன. கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக, அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிந்தனர்.
நேற்று, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் இப்பகுதிகளுக்கு வந்தனர். பகலில் கடும் வெயில் நிலவியதால், கவியருவியில் குளிக்க ஆர்வம் காட்டினர்.
வனத்துறையினர் கூறுகையில், 'பகலில் வெயில் அதிகம் இருந்ததால், கவியருவிக்கு சென்று குளிக்க சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டினர். விதிமீறலை தடுக்க வேட்டைத் தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்,' என்றனர்.
* வால்பாறையில், சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட பகுதியில், சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
வால்பாறையில், படகுசவாரி சென்றும், தாவரவில் பூங்காவையும் கண்டும் ரசித்தனர். தங்குவிடுதிகள், ரிசார்ட்கள் அனைத்தும் 'ஹவுஸ்புல்' ஆகவுள்ளன.
இந்நிலையில், முக்கிய இடங்களில் பார்க்கிங், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், சுற்றுலா பயணியர் அதிருப்தியடைந்தனர்.