/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வறட்சியால் பரிதவிக்கும் வனவிலங்குகள் தாகம் தீர்க்க டிராக்டரில் தண்ணீர் சப்ளை
/
வறட்சியால் பரிதவிக்கும் வனவிலங்குகள் தாகம் தீர்க்க டிராக்டரில் தண்ணீர் சப்ளை
வறட்சியால் பரிதவிக்கும் வனவிலங்குகள் தாகம் தீர்க்க டிராக்டரில் தண்ணீர் சப்ளை
வறட்சியால் பரிதவிக்கும் வனவிலங்குகள் தாகம் தீர்க்க டிராக்டரில் தண்ணீர் சப்ளை
ADDED : பிப் 11, 2025 11:35 PM

பொள்ளாச்சி; ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட செயற்கை நீராதாரங்களில், வனவிலங்குகள் தாகம் தீர்க்க வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், 1,479 ச.கி.மீ., பரப்பில், பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி, உடுமலை, அமராவதி, வந்தரவு, கொழுமம் ஆகிய எட்டு வனச்சரகங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த வனப்பகுதியில் அதிகப்படியான யானை, காட்டெருமை, மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகளும், பல்வேறு வகையான பறவையினங்களும் காணப்படுகின்றன.
இவைகள், வனப்பகுதியில் உள்ள குட்டைகள், ஓடை, சிற்றோடை உள்ளிட்ட நீராதாரங்கள் வாயிலாக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
ஆனால், கோடை வறட்சியின் போது தண்ணீர் கிடைக்காமல் வனவிலங்குகள் பரிதவிக்கின்றன. நீர்நிலைகளை தேடி வனவிலங்குகள் அலைமோதும் சூழல் உருவாகுகிறது. அவ்வகையில்,கடந்த சில மாதங்களாக மழையின்றி, பகலில், அதிக வெப்ப நிலை பதிவாகி வருவதால், வனத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. மரங்கள், செடி மற்றும் கொடிகள் காய்ந்து கிடக்கின்றன.
தடுப்பணைகள், கசிவு நீர் குட்டைகள், பண்ணைக் குட்டைகள், ஆறுகள் போன்ற நீராதாரமிக்க பகுதிகளும் வறண்டு காணப்படுகின்றன.
வனப்பகுதியில் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுடன் கூடிய தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. தவிர, டிராக்டர் வாயிலாக தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு, ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தொட்டிகள் நிரப்பப்பட்டும் வருகின்றன.
வனத்துறையினர் கூறுகையில், 'வனச்சரக பகுதிகளில் உள்ள செயற்கை நீராதாரமிக்க தண்ணீர் தொட்டி, பண்ணைக் குட்டைகள், கசிவுநீர் குட்டைகளில் டிராக்டர்கள் வாயிலாகவும் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு நிரப்பப்படுகிறது. தொட்டிகளில் தண்ணீரின் இருப்பு குறித்து அவ்வப்போது கண்காணிக்கப்படும். அதற்கேற்ப மீண்டும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். புலிகள் காப்பகம் முழுவதிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,' என்றனர்.

