/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்க்கெட்டில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு கமிஷனரை முற்றுகையிட்ட வியாபாரிகள்
/
மார்க்கெட்டில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு கமிஷனரை முற்றுகையிட்ட வியாபாரிகள்
மார்க்கெட்டில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு கமிஷனரை முற்றுகையிட்ட வியாபாரிகள்
மார்க்கெட்டில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு கமிஷனரை முற்றுகையிட்ட வியாபாரிகள்
ADDED : ஏப் 23, 2025 12:48 AM

வால்பாறை, ; வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் வணிகவளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி கமிஷனரை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
வால்பாறை நகராட்சி சார்பில், புதுமார்க்கெட் பகுதியில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிகவளாகம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு, வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு, தமிழக வணிகர் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், வியா பாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ், தமிழக வணிகர் சம்மேளன தலைவர் ரவீந்தரன் ஆகியோர் தலைமையில், நகராட்சி கமிஷனரை நேற்று வியாபாரிகள் முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில், அமீது, மயில்கணேஷ் (அ,தி.மு.க.,), செந்தில்முருகன், தங்கவேல் (பா.ஜ.,) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வியாபாரிகள் தரப்பில் பேசும் போது, 'புதுமார்க்கெட் பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்டக்கூடாது. இதனால், அங்குள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். தற்போது உள்ள கடைகளை நகராட்சி சார்பில் சீரமைத்து கொடுத்தாலே போதும்' என்றனர்.
நகராட்சி கமிஷனர் ரகுராமன் பேசும்போது, ''மார்க்கெட் பகுதியில் தற்போதுள்ள நகராட்சி கடைகள், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. அதனால், பழைய கட்டடத்தை இடித்து, வணிகவளாகம் கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
வியாபாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்த பின், வியாபாரிகள் பாதிக்காத வகையில் மாற்று இடம் வழங்கப்படும். அதன்பின் வணிக வளாகம் கட்டும் பணி துவங்கப்படும். பணி நிறைவடைந்த பின், மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு, விதிமுறைகளுக்கு உட்பட்டு கடைகள் வழங்கப்படும்'' என்றார்.
இதனையடுத்து, வியாபாரிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

