/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து போலீசார் செய்யும் குளறுபடி : நஞ்சப்பா ரோட்டுக்கு பஸ் போக்குவரத்து 'கட்'
/
போக்குவரத்து போலீசார் செய்யும் குளறுபடி : நஞ்சப்பா ரோட்டுக்கு பஸ் போக்குவரத்து 'கட்'
போக்குவரத்து போலீசார் செய்யும் குளறுபடி : நஞ்சப்பா ரோட்டுக்கு பஸ் போக்குவரத்து 'கட்'
போக்குவரத்து போலீசார் செய்யும் குளறுபடி : நஞ்சப்பா ரோட்டுக்கு பஸ் போக்குவரத்து 'கட்'
ADDED : நவ 06, 2025 11:29 PM

கோவை: கோவை, அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் சந்திப்பில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் (சிறப்பு திட்டங்கள்) புதிதாக ரவுண்டானா அமைக்கப்படுகிறது. அப்பகுதிக்கு வரும் வாகனங்களை கணக்கீடு செய்யாமல், சரியான வடிவமைப்பில் அமைக்காததால், தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதனால், போலீஸ் தரப்பில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. அதன் பிறகும் நெருக்கடி தீராததால், சிக்னலும் இயக்குவதில்லை; போக்குவரத்து போலீசாரும் நிற்பதில்லை. அதனால், வாகன ஓட்டிகளே எதிர் திசையில் வரும் வாகனங்களை பார்த்து வேகத்தை குறைத்து கடந்து செல்கின்றனர். இதன் காரணமாக, ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதில்லை.
மாறாக, போக்குவரத்து போலீசார் செய்துள்ள குளறுபடியால் பழைய மேம்பாலத்திலும், சுரங்கப் பாதையிலும் வாகனங்கள் தேங்க ஆரம்பித்திருக்கின்றன. மில் ரோடு, கூட்ஸ் ஷெட் ரோடு மற்றும் ப்ரூக் பாண்ட் ரோட்டில் இருந்து மேம்பாலத்தில் வாகனங்களில் வருவோர், நஞ்சப்பா ரோட்டுக்கு திரும்ப முடியாமல் டிவைடர்கள் வைத்து தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் ரவுண்டானாவை கடந்து எல்.ஐ.சி. சந்திப்புக்கு சென்று சிக்னலில் காத்திருந்து வ.உ.சி. மைதானம் வழியாக பார்க் கேட் சென்றடைந்து, நஞ்சப்பா ரோட்டுக்கு சென்றடைய வேண்டும்.
இத்தகைய அலைச்சலை தவிர்க்க, சுரங்கப்பாதையில் வந்தால் இடது புறம் திரும்பி நஞ்சப்பா ரோட்டுக்கு செல்லலாம் என்பதால், மேற்கண்ட மூன்று ரோடுகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சுரங்கப் பாதையையே பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக சுரங்கப் பாதையில் நெருக்கடி ஏற்படுகிறது.
இதேபோல், மில் ரோட்டில் இருந்து வரும் டவுன் பஸ்கள் இடது புறம் திரும்பி நஞ்சப்பா ரோடு வழியாக காந்திபுரம் செல்லும்; சர்ச் அருகே பஸ் ஸ்டாப் இருக்கிறது. இவ்வழித்தடம் தடுக்கப்பட்டதால், டவுன் பஸ்கள் எல்.ஐ.சி. சந்திப்பு வழியாக சுற்றிச் செல்கின்றன. இதன் காரணமாக பஸ் பயணிகள் பார்க் கேட் ஸ்டாப்பில் இறக்கி விடப்படுகின்றனர். உப்பிலிபாளையம் ரவுண்டானா பகுதியில் உள்ள இடத்தை அளவீடு செய்து, வடிவமைப்பை மாற்றியமைத்தால் தேவையற்ற நெருக்கடியை தவிர்க்கலாம். அதை விட்டு விட்டு, எல்.ஐ.சி. சந்திப்பில் ஒரு சிக்னல், ரவுண்டானாவில் ஒரு சிக்னல், நஞ்சப்பா ரோடு வழித்தடம் மறிப்பு என போக்குவரத்து போலீசார் செய்து வரும் குளறுபடியான செயல்பாடுகளால் வாகன ஓட்டிகள் தினமும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர்.

