/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலக்காடு கோட்டத்தில் இருந்து மாற்றணும்! ரயில் பயணியர் வலியுறுத்தல்
/
பாலக்காடு கோட்டத்தில் இருந்து மாற்றணும்! ரயில் பயணியர் வலியுறுத்தல்
பாலக்காடு கோட்டத்தில் இருந்து மாற்றணும்! ரயில் பயணியர் வலியுறுத்தல்
பாலக்காடு கோட்டத்தில் இருந்து மாற்றணும்! ரயில் பயணியர் வலியுறுத்தல்
ADDED : ஏப் 28, 2025 04:04 AM
பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனை, பாலக்காடு கோட்டத்தில் இருந்து, சேலம் அல்லது மதுரை கோட்டத்துக்கு மாற்ற வேண்டும்,' என ஆலோசனை கூட்டத்தில் ரயில் பயணியர் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சியில் ரயில் பயணியருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நித்தியானந்தம், ஆனந்தகுமார், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.
ரயில் பயணியர் சங்கத்தினர் பேசியதாவது:
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன்களில், புகார்களை தெரிவித்து நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்படுகிறது. அங்கு தமிழ் தெரியாத அதிகாரிகள் இருப்பதால், கோரிக்கைகளை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதில் சிரமம் உள்ளது. இதற்கு அங்கு தமிழ் மற்றும் பிற மொழிகள் நன்கு தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும்.
ரயில்வே ஸ்டேஷன்களை ஆய்வு செய்ய வேண்டும். கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி - கோவை உதய் டபுள் டெக்கர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலை, பொள்ளாச்சி வழியாக பழநி அல்லது பாலக்காட்டுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.
எர்ணாகுளம் - பாலக்காடு மெமு பயணியர் ரயிலை, ஆனைமலை ரோடு வழியாக பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.
பொள்ளாச்சி - சென்னை இடையே கிணத்துக்கடவு, போத்தனுார், ஈரோடு சேலம் வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும். பொள்ளாச்சி வழியாக பழநி - மேட்டுப்பாளையம் நேரடி ரயில் இயக்க வேண்டும்.
பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தி பயண நேரத்தை, 50 நிமிடங்களாக குறைக்க வேண்டும்.
பொள்ளாச்சி - கோவை இடையே காலையில், 7:25 மணிக்கு இயக்கப்பட்ட ரயில், தற்போது, 8:00 மணிக்கு இயக்கப்படுகிறது. இதனால், தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள் பாதிக்கின்றனர். எனவே, மீண்டும் காலை, 7:25 மணிக்கு ரயில் இயக்க வேண்டும்.
அதே போன்று, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். ஸ்டேஷனுக்கு அம்பராம்பாளையத்தில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
பாலக்காடு கோட்டத்தில் இருக்கும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன்களை, சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி பேசியதாவது:
பயணியரிடையே ஒருமித்த கருத்து இருந்தால், காலை, 8:00 மணிக்கு இயக்கப்படும் ரயிலை மீண்டும் காலை, 7:25 மணிக்கு இயக்க ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கலாம். மீண்டும், மீண்டும் நேரத்தை மாற்ற வேண்டுமென கேட்க முடியாது.
அதே போன்று, ரயில்வே சம்பந்தப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் மனுக்களாக ரயில்வே அமைச்சரிடம் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது. தொடர்ந்து, ரயில்கள் இயக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும்.
இவ்வாறு, பேசினார்.