ADDED : மார் 31, 2026 06:28 PM
கோவை: மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பயிற்சி வகுப்புகளை பெரும்பாலான பணியாளர்கள் புறக்கணித்ததால், தேர்தல் பணிகளில் சுனக்கம் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தின், 10 தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 17 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள், அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்ட மையங்களில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது. ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் பிற அலுவலர்களுக்கான இந்தப் பயிற்சியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது.
இப்பயிற்சியில் 3,000 பேர் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஒரே நேரத்தில் 3,000 பேர் பயிற்சியில் பங்கேற்காததால், ஓட்டுச்சாவடி கண்காணிப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு மாற்று நபர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
