சமையலர், உதவியாளருக்கு நகராட்சியில் பயிற்சி முகாம்
சமையலர், உதவியாளருக்கு நகராட்சியில் பயிற்சி முகாம்
UPDATED : நவ 19, 2026 07:09 PM
ADDED : நவ 19, 2026 07:04 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், பள்ளி சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. அதில், நகராட்சி பள்ளிகளை சேர்ந்த, 40 சமையலர், சமையல் உதவியாளர்கள் பங்கேற்றனர்.
முகாமில், ஊட்டச்சத்து நிபுணர் உள்ளிட்டோரை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், சத்துணவு பணியாளர்கள் இடையே பணியின் மீது ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வை வளர்த்தல் குறித்து தெரிவிக்கப்பட்டது.
மேலும், தன்சுத்தம், உடை, நடத்தை மேலாண்மை, எரிவாயு பயன்பாடு மற்றும் பாதுகாப்பு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. காஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என கவனிக்கவும், சமையல் அறையில் நல்ல காற்றோட்டம் வசதி குறித்து விளக்கப்பட்டது.
காஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டால், உடனே ரெகுலேட்டரை மூடி வைக்க வேண்டும். கசிவு இருக்கும் போது தீப்பெட்டி, லைட்டர் அல்லது சுவிட்சுகளை பயன்படுத்தக்கூடாது. அடுப்பு, காஸ் குழாய் மற்றும் ரெகுலேட்டர் பழுதாக இருந்தால் உடனடியாக மாற்ற வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்காக, சிறுதானிய ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சிகள், குழு விவாதம், பங்கேற்று நடித்தல், பங்கேற்பு முறை, செயல்முறை விளக்கம் வாயிலாக அளிக்கப்பட்டன.
