/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஆர்.பி.எப்.,ல் பயிற்சி நிறைவு விழா
/
சி.ஆர்.பி.எப்.,ல் பயிற்சி நிறைவு விழா
ADDED : அக் 25, 2024 10:00 PM

பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சி.ஆர்.பி.எப்.,) வளாகத்தில், 133 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது.
கோவை துடியலுார் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய பயிற்சி கல்லுாரி உள்ளது. இங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடந்த நவம்பர் முதல், 7 பெண்கள் உட்பட, 133 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி வகுப்புகள் நடந்தன. நிறைவு விழா நேற்று காலை நடந்தது. இதில், மத்திய பயிற்சி கல்லுாரி முதல்வர் வெங்கடேஷ், 133 எஸ்.ஐ.,க்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அனைத்து வீரர்களும் உறுதிமொழி ஏற்றனர். தனி திறனில் தங்களுடைய திறமையை நிரூபித்த நான்கு எஸ்.ஐ.,க்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பயிற்சி கல்லுாரியில் முதல்வர் வெங்கடேஷ் பேசுகையில், ''பயிற்சி முடித்து செல்லும் அனைத்து எஸ்.ஐ.,க்களும் நாட்டுப் பற்றுடன், அர்ப்பணிப்பு உணர்வுடன், பொதுமக்களுக்கு பணியாற்ற வேண்டும்'' என்றார். நிகழ்ச்சியையொட்டி யோகாசனம், கைகளால் ஓடு உடைத்தல், கலாசாரத்தை வெளிப்படுத்தும் பெண்கள் நடனம் உள்ளிட்டவை நடந்தன.