/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 16, 2025 11:04 PM

கோவை; புதிதாக நியமனம் பெற்ற, இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதல் சுற்று பயிற்சி, கோவை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சியில் ஆசிரியர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடைமுறைகள் திட்டங்கள் ஆகியன குறித்தும் குழந்தைகள் நலன், குழந்தைகளுக்கான உரிமைகள், ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகள், கற்றல் விளைவுகள், கற்றல் அடைவு மேம்பாடு ஆகியன குறித்தும் விளக்கப்படுகிறது.
பயிற்சியை கோவை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஒருங்கிணைத்து நடத்துகிறது. 45க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனைக்கட்டியில், நாளை வரை நடைபெறும், இப்பயிற்சியினை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் அமுதவல்லி, கடந்த 14ம் தேதி தொடங்கி வைத்தார்.
தொடக்க நிகழ்வில், 16 மாவட்டங்களைச் சேர்ந்த 'டயட்' முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் வட்டாரவள ஆசிரியர் பயிற்றுனர்கள் தலா ஒருவர் என, மாவட்டத்துக்கு 5 பேர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட டயட் முதல்வர் லக்குமி நரசிம்மன் கூறுகையில், “புதிதாகப் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல் அடைவுக்கு ஏற்றவாறு, பாடங்களை எப்படி திட்டமிட்டு நடத்துவது என பயிற்சி பெறுகிறார்கள். இதன் இரண்டாம் சுற்று, வரும் 21 முதல் 25 வரை மதுரையில் நடைபெறும்,” என்றார்.