ADDED : செப் 24, 2024 11:54 PM
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே கெம்மாரம்பாளையத்தில், வேளாண்மை துறை அட்மா சார்பில், மண்புழு உரம் உற்பத்தி தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது.
இதில், காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி விவசாயிகளிடம் கூறுகையில், ''மண்புழு உரம் உற்பத்தி செய்து, அவற்றை பயன்படுத்துவதன் வாயிலாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது உற்பத்தி திறனை அதிகப்படுத்தலாம். மண்புழு உரம் பயன்படுத்துவதால், 25 சதவீதம், ரசாயன உரச்செலவு குறையும். மேலும் அதிக மகசூல் கிடைக்கிறது.
மண்புழு உரம் தொழில்நுட்பத்தை, அதிகளவில் பின்பற்றுவது, இக்கால கட்டத்தில் மிகவும் இன்றி அமையாத ஒன்றாகும். இயற்கை கழிவுகளும், மண் புழுக்களையும் கொண்டு விவசாயிகள் தங்கள் இடத்திலேயே, மண்புழு உரத்தை எளிதாக தயாரிக்கலாம். ஒவ்வொரு வருடமும் 5 டன் மண்புழு உரத்தை மண்ணில் இடுவதால், மண்ணில் அங்கக பொருட்களின் அளவு அதிகரிக்கும்.
மண்ணில் நுண்உயிர்களை பெருக செய்கிறது. காரமடை வட்டாரத்தில் மண்புழு உர படுகையின் மொத்த விலை ரூ.6,000 இதற்கு மானியம் ரூ.3,000 வழங்கப்படுகிறது,'' என்றார்.---