ADDED : மார் 08, 2026 05:17 AM
கோவை: கடுமையான சுவாச பாதிப்புடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவனைக்கு வந்த 43 வயது பெண்ணுக்கு பொதுமருத்துவ நிபுணர் டாக்டர் பினு சிகிச்சையளித்தார். எதிர்ப்பார்த்த முன்னேற்றம் இல்லை என்றபோது, நோயாளியை நுரையீரல் நிபுணர் டாக்டர் அருண் கங்காதர் பரிசோதனை செய்தார்.
'ப்ரோங்கோஸ்கோபி' பரிசோதனையில், நுரையீரலின் ஆழப்பகுதியில் வெற்றிலைப் பாக்கு துண்டுகள் உறுதியாக சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது.
கடும் குளிர் தொழில்நுட்பம் கொண்ட கரைவோப்ரோப் கருவி மூலம் பாக்கு துண்டுகளை உறையவைத்து, சிறப்பு கருவிகள் உதவியுடன் ஒவ்வொரு துண்டும் கவனத்துடன் அகற்றப்பட்டது. இதனால் காற்றுக்குழாய் மீண்டும் சீராக திறந்து, நுரையீரல் செயல்பாடு வழக்க நிலைக்கு திரும்பியது. சிகிச்சைக்கு பிறகு நோயாளி முழுமையாக குணமடைந்தார்.
டாக்டர் அருண் கங்காதர் கூறுகையில், '' பொதுவாக இவ்வகையான வெளிப்பொருள் உள்ளிழுக்கும் பிரச்னைகள் வயதானவர்களிடம் அதிகமாகக் காணப்படும். ஆனால் 43 வயதான ஒருவரிடம் இது நிகழ்வது மிகவும் அரிதானது. குணமடையாத நுரையீரல் தொற்று இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதன் பின்னால் மறைந்திருக்கும் காரணங்களை கண்டறிவது மிக முக்கியம், என்றார்.
