/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரக்கன்று நடுவதை ஊக்குவிக்க வேண்டும்! பசுமை பங்களிப்பை அதிகரிக்க அறிவுரை
/
மரக்கன்று நடுவதை ஊக்குவிக்க வேண்டும்! பசுமை பங்களிப்பை அதிகரிக்க அறிவுரை
மரக்கன்று நடுவதை ஊக்குவிக்க வேண்டும்! பசுமை பங்களிப்பை அதிகரிக்க அறிவுரை
மரக்கன்று நடுவதை ஊக்குவிக்க வேண்டும்! பசுமை பங்களிப்பை அதிகரிக்க அறிவுரை
ADDED : செப் 19, 2025 08:04 PM
பொள்ளாச்சி; 'மிஷன் லைப்' இயக்கத்தின் கீழ், அரசு பள்ளிகளில், அதிகப்படியான மாணவர்கள் வாயிலாக மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்திற்கு எதிராக மாணவர்களிடம் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'மிஷன் லைப்' இயக்கத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.
குறிப்பாக, ஒவ்வொரு மாணவரும் பள்ளி, வீடு அல்லது உள்ளூர் சுற்றுச்சூழலில் ஒரு மரக்கன்றை நட வேண்டும். மரக்கன்றுடன், தாயார் அல்லது பாதுகாவலருடன் போட்டோ எடுத்து, 'Eco Clubs for Mission Life' என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள்தோறும், மாணவர்கள் வாயிலாக மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன. இருப்பினும், சில பள்ளிகளில், இதற்கான நடவடிக்கை தொய்வு நிலையில் உள்ளது.
சில பள்ளிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களது வீடுகளில் மரக்கன்றுகளை நடவு செய்து, போட்டோ பதிவேற்றம் செய்துள்ளனர். சில பள்ளிகளில், ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே போட்டோ பதிவு செய்யப்பட்டுள்ளதால், மரக்கன்றுகளை அதிகளவு நடவு செய்ய, பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு பள்ளியிலும், பசுமை இயக்கக் குழு பொறுப்பாசிரியர், மாணவர் குழு தலைவர்கள் வாயிலாக திட்டமிட்டு, இந்த நடவடிக்கையை ஒருங்கிணைக்க வேண்டும். இதற்காக, வனத்துறையுடன் இணைந்து தேவையான மரக்கன்றுகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர் ஒவ்வொருவருக்கும், இயற்கைக்கு செய்த பசுமை பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், சான்றிதழும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு இருந்தும், சில பள்ளிகளில் மரக்கன்றுகளை நடவு செய்ய மாணவர்கள் ஊக்குவிக்கப்படாமல் உள்ளனர்.
ஒற்றை இலக்கத்தில் மரக்கன்றுகள் நடவு செய்த பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கூடுதலாக மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.