/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை விரிவாக்கத்துக்கு மரங்கள் அகற்ற திட்டம்
/
சாலை விரிவாக்கத்துக்கு மரங்கள் அகற்ற திட்டம்
ADDED : அக் 11, 2024 10:58 PM
அன்னுார், : மேட்டுப்பாளையம் - அவிநாசி சாலை விரிவாக்கத்திற்காக, மரங்களை வெட்டி அகற்றுவதற்கு பதில், மையப்பகுதியில் நட, ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து பொகலுார், அன்னுார், கருவலுார் வழியாக அவிநாசி, ஆட்டையம்பாளையம் வரை மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறையினர், சாலை விரிவாக்கத்திற்காக சாலையின் இருபுறமும் உள்ள 800-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அகற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்பான 'களம் பவுண்டேஷன்' சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்கள் அமைப்பு சார்பில், கடந்த 10 ஆண்டுகளாக, அன்னுார், கருவலுார், அவிநாசியில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறோம்.
இந்நிலையில், நெடுஞ்சாலை துறை பலநுாறு மரங்களை வெட்டி அகற்ற திட்டமிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு பயன் தந்து வரும் மரங்களை அகற்றாமல் அரசு மாற்று வழியை சிந்திக்க வேண்டும்.
கர்நாடக மாநிலம் மற்றும் சண்டிகரில் சாலை விரிவாக்கத்தின் போது, சாலையோரத்தில் உள்ள மரங்களை சாலையின் மையப் பகுதியில் நட்டு வெற்றிகரமாக பராமரித்து வருகின்றனர்.
எனவே, இதே வழிமுறையை அவிநாசி - மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையிலும் செயல்படுத்த வேண்டும். பல நுாறு மரங்களை வெட்டி அகற்றுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

