/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராஜவாய்க்கால் கரையில் மரங்களுக்கு வெட்டு; கழிவுகளால் தடைபட்ட தண்ணீர்; கருகும் நெற்பயிர்களால் கண்ணீர்
/
ராஜவாய்க்கால் கரையில் மரங்களுக்கு வெட்டு; கழிவுகளால் தடைபட்ட தண்ணீர்; கருகும் நெற்பயிர்களால் கண்ணீர்
ராஜவாய்க்கால் கரையில் மரங்களுக்கு வெட்டு; கழிவுகளால் தடைபட்ட தண்ணீர்; கருகும் நெற்பயிர்களால் கண்ணீர்
ராஜவாய்க்கால் கரையில் மரங்களுக்கு வெட்டு; கழிவுகளால் தடைபட்ட தண்ணீர்; கருகும் நெற்பயிர்களால் கண்ணீர்
ADDED : ஆக 24, 2025 11:44 PM

மடத்துக்குளம்; கரையில் இருந்த முட்புதர்களை வெட்டி, வாய்க்காலில் வீசியவர்களால், நிலைப்பயிர்களான நெற்பயிர்கள் கருகி வருவதாக, குமரலிங்கம் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியிலுள்ள, 1,100 ஏக்கர் விளைநிலங்களுக்கு, அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. அங்குள்ள ராஜவாய்க்காலில், 52 மடைகள் அமைத்து, பாசனத்துக்கு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இப்பாசன பகுதியில், நெல் பிரதான சாகுபடியாக உள்ளது.
தென்மேற்கு பருவமழை சீசனில் அமராவதி அணை நிரம்பியதையடுத்து, குமரலிங்கம் ராஜவாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து, 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில், நெல் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். மொத்தம், 130 நாட்களுடைய குண்டு ரக நெல் ரகத்துக்காக நாற்று நடவு செய்து, தற்போது, 45 நாட்களாகிறது.
இந்நிலையில், 16 மடைகளை தாண்டி பாசன நீர் விளைநிலங்களுக்கு வரவில்லை. விவசாயிகள் சென்று ராஜவாய்க்காலை பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர்.
கால்வாய் இருப்பதே தெரியாத அளவுக்கு, முட்புதர்கள் மற்றும் இதர கழிவுகள் அங்கு கொட்டப்பட்டிருந்தது. கரையில் இருந்த நுாற்றுக்கணக்கான பச்சை மரங்களை வெட்டியுள்ளனர்; கிளைகளை மட்டும் கால்வாயில் போட்டுச்சென்றள்ளனர்.
குமரலிங்கம் ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் கூறியதாவது: ராஜவாய்க்கால் கரையில் இருந்த சீமை கருவேல மரங்கள், வேப்ப மரக்கிளைகளை வெட்டி அப்படியே கால்வாயில் போட்டுள்ளனர்.
பொதுப்பணித்துறை, பாசன சபையினர், பாசன காலத்தில் நடந்தஇந்த அவலத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால், செழித்து வளர வேண்டிய நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருக துவங்கியுள்ளது.
பல நாட்களாக மடையில் தண்ணீர் வரவில்லை. கால்வாய் முழுவதும் மூடியுள்ளது குறித்து புகார் தெரிவித்தும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. நீர் நிர்வாக பிரச்னைகளால், முப்போக நெல் சாகுபடி, ஒரு போகமாக மாறியுள்ளது.
அதிலும், குறித்த நேரத்தில், தண்ணீர் கிடைக்காத அளவுக்கு, கால்வாயின் நிலை உள்ளது. உடனடியாக கால்வாயில் கிடக்கும் மரக்கிளைகளை அகற்றி, பாசன நீர் வழங்கவிட்டால் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் முழுமையாக கருகி விடும்.
பாசன கால்வாயை குப்பை கிடங்காக மாற்றியவர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.