ADDED : ஜன 20, 2025 11:03 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், வாகனங்கள் நான்கு புறமும் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று வடமாநிலத்தில் இருந்து வந்த லாரி, டிரக்கை இணைத்து இழுத்தபடியே, பாலக்காடு ரோடு செல்ல பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்றது.
அப்போது, ரவுண்டானாவை ஒட்டிச் சென்றதால், டயர் பக்கவாட்டு சுவரில் உரசி ரவுண்டானா சுவர் சேதமடைந்தது; ஒரு டயர் பஞ்சரானது. மேலும், அந்த வாகனம் செல்லும் வரை மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கனரக வாகனங்கள், போக்குவரத்து நிறைந்த நேரத்தில் நகரப்பகுதிக்கு வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியும், சில வாகனங்கள் விதிமுறை மீறி நகரப்பகுதிக்குள் நுழைகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில், நேற்று டிரக்கை இழுத்து சென்ற லாரியால் சுவர் சேதமடைந்ததுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.