ADDED : பிப் 26, 2024 11:18 PM

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே உள்ள சின்னவேடம்பட்டி ராஜவாய்க்காலின் குறுக்கே மூன்றாம் குடிநீர் திட்டத்துக்காக பதிக்கப்பட்ட குழாயால் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை வடக்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில், பருவ காலங்களில் பெய்யும் மழை நீர், வெள்ளமென பெருகி, சோமையம்பாளையம், கணுவாய் மேல், கீழ் தடுப்பணைகளை நிரப்பி, அங்கிருந்து சின்னவேடம்பட்டி ராஜ வாய்க்கால் வழியாக வெள்ளக்கிணறு குட்டையை நிறைத்து, பின்னர் சின்னவேடம்பட்டி ஏரியை அடைகிறது.
இதனால் தடாகம், கணுவாய், பன்னிமடை, துடியலுார், வெள்ளகிணறு, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி வட்டாரங்களில் நிலத்தடி நீர் பெருகும். இதனால் ஆழ் குழாய் கிணறுகள், திறந்த வெளி கிணறுகளில் நீர் பெருகி, நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் செழிக்கும்.
கணுவாயில் இருந்து வரும் ராஜ வாய்க்கால் பல்வேறு குடியிருப்புகள் வழியாக, மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டை கடந்து, வெள்ளக்கிணறு குட்டையை அடைகிறது. பின், அங்கிருந்து சரவணம்பட்டி வழியாக சின்னவேடம்பட்டி ஏரியை அடைகிறது.
இதில், துடியலுார் திருமூர்த்தி நகர் அருகே உள்ள வளர்மதி நகர் அருகே செல்லும் ராஜவாய்க்காலின் குறுக்கே, பில்லுார் மூன்றாம் குடிநீர் திட்ட ராட்சத குழாயை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைத்துள்ளது. இதனால் மழைக்காலத்தில் ராஜ வாய்க்கால் வழியாக வரும் வெள்ள நீர் தடுக்கப்பட்டு, ஊருக்குள் புகுந்து, பொருள் சேதமும், உயிர் சேதமும் ஏற்படுத்துவதோடு, விவசாயமும் பாதிக்கும். எனவே, ராஜவாய்க்கால் குறுக்கே செல்லும், மூன்றாம் குடிநீர் திட்ட குழாயை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் போராட முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயி காளிச்சாமி கூறுகையில், ''பல ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடமிருந்து நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு, சின்னவேடம்பட்டி ராஜவாய்க்கால் அமைக்கப்பட்டது.
ராஜ வாய்க்கால் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பில்லுார் மூன்றாம் குடிநீர் திட்ட குழாயை இன்னும் சில அடிகள் தூக்கி அமைக்க வேண்டும். தற்போது உள்ள நிலையில் இருந்தால், பருவ மழை காலங்களில் ராஜவாய்க்காலில் வரும் நீர் தடுக்கப்பட்டு வளர்மதி நகர் மற்றும் அதை சுற்றி உள்ள குடியிருப்புகளுக்குள் போகும். மேலும், வெள்ள கிணறு குட்டை, சின்னவேடம்பட்டி ஏரி உள்ளிட்ட பல்வேறு தடுப்பணைகள் வறண்டு போகும் அபாயம் ஏற்படும். இதனால், அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவர்,'' என்றார்.
இது குறித்து, விவசாயிகளிடம் ராஜவாய்க்காலை பராமரித்து வரும், பொதுப்பணித்துறை உதவி இன்ஜினியர் சிவக்குமார் கூறுகையில், ''சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதுவரை, இப்பணியை உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்'' என்றார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி இன்ஜினியர் பட்டன் கூறுகையில், ''ராஜவாய்க்கால் குறுக்கே செல்லும் குழாயை பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
