234 கோடி ரூபாய் திட்டங்கள் இழுபறி! ஒப்பந்ததாரர்கள் முன்வராததால்
234 கோடி ரூபாய் திட்டங்கள் இழுபறி! ஒப்பந்ததாரர்கள் முன்வராததால்
UPDATED : ஜூலை 08, 2026 06:43 AM
ADDED : ஜூலை 07, 2026 10:32 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் நான்கு வழிச்சாலை விரிவாக்கம், பவானி ஆற்றில் கூடுதல் பாலம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 234 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம் கோரியுள்ளது. யாரும் முன்வராததால், திட்டங்கள் நிறைவேறுவது இழுபறியாகியுள்ளது. மேட்டுப்பாளையத்தில், கோவை - மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி, மேட்டுப்பாளையம் - அன்னூர், சிறுமுகை - அண்ணாஜிராவ் உள்ளிட்ட முக்கிய சாலைகள் உள்ளன. காரமடை நகர் பகுதியில் கன்னார்பாளையம், தோலம்பாளையம் சாலைகள் உள்ளன.
நகருக்குள் நான்கு வழிச்சாலை, ரவுண்டானா போன்றவை இல்லாததால், மேட்டுப்பாளையம், காரமடை நகரப்பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திணறுகின்றன. இச்சாலைகளில் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாததால் சாலைகள் குறுகலாக உள்ளன.
இதையடுத்து, காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் நகர் பகுதிகள் சாலைகளை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த கடந்த நவ.,ல் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கை கோரப்பட்டது. இந்த திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து, மீண்டும் தயாரிக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஆனால், யாரும் முன்வராததால், மேம்பாட்டு பணிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோவை கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் ஒருவர் கூறியதாவது:-
கோவை பூமார்க்கெட் -கல்லாறு ரயில்வே கேட் வரையிலான சாலை, மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலைகளில் சீரமைப்பு, 9 சிறுபாலங்கள், பவானி ஆற்றில் கூடுதல் பாலம், ஆக்கிரமிப்பு அகற்றம், நிலம் எடுப்பு, சி.டி.சி., டிப்போ முதல் ஊட்டி சாலை தீம் பார்க் வரை 10 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை, ஐந்து முக்கு பகுதியில் ரவுண்டானா உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.234 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்த திட்ட அறிக்கை ஏற்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், மத்திய அரசு நிராகரித்து விட்டது. கூடுதல் வேலைகளை இணைத்து புது திட்ட அறிக்கைக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதுவரை யாரும் ஒப்பந்தம் கோரவில்லை. வரும் 22ம் தேதிக்குள் எடுக்காவிட்டால், ரத்தாகிவிடும். மீண்டும் ஒப்பந்தம் கோரப்படும். திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டால் நஷ்டம் ஏற்படும் என்பதால், ஒப்பந்ததாரர்கள் தயங்குகின்றனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
திட்ட அறிக்கைக்கான டெண்டர் எடுக்கவே தயக்கம் நிலவுவதால், மேட்டுப்பாளையம் காரமடை பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் நடப்பது இழுபறியாகிறது.
