/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெரு விளக்குகள் 'கண் மூடியதால்' மது பார் ஆக மாறிய டி.வி.எஸ்.நகர்
/
தெரு விளக்குகள் 'கண் மூடியதால்' மது பார் ஆக மாறிய டி.வி.எஸ்.நகர்
தெரு விளக்குகள் 'கண் மூடியதால்' மது பார் ஆக மாறிய டி.வி.எஸ்.நகர்
தெரு விளக்குகள் 'கண் மூடியதால்' மது பார் ஆக மாறிய டி.வி.எஸ்.நகர்
ADDED : செப் 25, 2024 08:51 PM
கோவை : பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்தது. மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோர், மனுக்கள் பெற்று, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர்.
கடை நடத்த அனுமதி வேண்டும்
கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் தரைக்கடை நடத்தி வந்தோம். 50 நாட்களுக்கு மேலாக கடை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.
மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி செலவு, வங்கி கடன், குடும்ப செலவுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. அப்பகுதியில் மீண்டும் கடை நடத்த அனுமதி தர வேண்டும்' என கூறியுள்ளனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
ஸ்ரீவெங்கடேசபுரம் மக்கள் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'கணபதி சத்தி ரோட்டில் இருந்து வெங்கடேசபுரம் காலனிக்குச் செல்லும் வழியில் அகலம் 35 அடியாக இருந்தது; அதன் அகலம் தற்போது மிகவும் சுருங்கியிருக்கிறது. ரோட்டை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும்' என கூறியுள்ளனர்.
தெருவிளக்குகள் எரியவில்லை
ஷாஜ் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத்தினரின் மனுவில், '16வது வார்டு டி.வி.எஸ்., நகரில் உள்ள எங்களது குடியிருப்பில் கடைக்கோடியில் உள்ள தெருவில் மூன்று மின் கம்பங்களில் விளக்குகள் இல்லை. இருள் கவ்வியிருப்பதால், இரவு நேரங்களில் ரோட்டில் அமர்ந்து மது அருந்துகின்றனர். அவர்களை தட்டிக் கேட்டால் கலாட்டா செய்கின்றனர். காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அச்சுறுத்தலாக இருக்கிறது' என கூறியுள்ளனர்.
சிறு வியாபாரிகள் பாதிப்பு
உக்கடம் புல்லுக்காடு 86வது வார்டு பொன் விழா நகரை சேர்ந்த சாலையோர சிறு வியாபாரிகள் கொடுத்த மனுவில், 'பொன்விழா நகரில் ஐம்பது ஆண்டுகளாக சாலையோரத்தில் கடை நடத்தி வந்தோம். போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, கடைகள் அகற்றப்பட்டன.
26 சிறு வியாபாரிகள் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புல்லுக்காடு கழிவு நீர் பண்ணை வளாகம் குடிநீர் தொட்டி அருகே மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அவ்விடத்தில் கடை நடத்த ஒதுக்கித் தர வேண்டும்' என கூறியுள்ளனர்.
மைதானத்தை சுற்றிலும் வேலி
கங்கா நகர் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வழங்கிய மனுவில், 'நீலிக்கோணாம்பாளையம் கங்கா நகர் பகுதியில், 104 வீடுகள் உள்ளன. வீட்டுக்குழாயில் சிறிதளவே தண்ணீர் வருகிறது. சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியிருக்கிறது. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து தர வேண்டும்' என கோரியுள்ளனர்.