/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் பிசியோதெரபிஸ்ட் கொலையில் இருவர் கைது
/
பெண் பிசியோதெரபிஸ்ட் கொலையில் இருவர் கைது
ADDED : ஜன 06, 2024 01:29 AM

போத்தனூர்;செட்டிபாளையம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பழைய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
போத்தனூர் அடுத்து செட்டிபாளையம் செல்லும் வழியிலுள்ள அம்பேத்கர் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் பாலா இசக்கிமுத்து; மாநகராட்சி தற்காலிக டிரைவர். மனைவி தனலட்சுமி, 32; பிசியோதெரபிஸ்ட். கடந்த, 30ம் தேதி தனலட்சுமி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். செட்டிபாளையம் போலீசார் மற்றும் ஐந்து தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.
'சிசிடிவி கேமரா' பதிவில், பர்தா அணிந்த ஒரு பெண், ஆணுடன் வீட்டிலிருந்து செல்வது தெரிந்தது. தொடர் விசாரணையில் ஆனைமலை கோட்டூரில் வசிக்கும், சந்திர ஜோதி, 41, சுரேஷ், 39 சிக்கினர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட இருவரும், ஆறாண்டு களுக்கு முன், குறிச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்தபோது, பழக்கம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் கண்டித்ததால், சரவணம்பட்டிக்கு சென்று வசித்துள்ளனர். அப்போது வீட்டு உரிமையாளரை தாக்கி, ரொக்கம் கொள்ளையடித்துவிட்டு, கோட்டூருக்கு சென்றுவிட்டனர்.
சரவணம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். அப்போது விபச்சார வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனலட்சுமியுடன் சந்திரஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தனலட்சுமியிடம், நகை, பணம் அதிகம் இருக்கும் என, சந்திரஜோதி சுரேஷிடம் கூறி, அபகரிக்க திட்டமிட்டார். கடந்த மாதம் 30ம் தேதி, சுரேஷை வாடிக்கையாளர் போல அழைத்துச் சென்றுள்ளார். சுரேஷுடன் ஒன்றாக இருந்தார்.
பின், தனலட்சுமி பணம் கேட்டபோது, சுரேஷ் தனலட்சுமியின் கழுத்தை துண்டால் இறுக்கினார். சம்பவ இடத்திலேயே தனலட்சுமி இறந்தார். வீட்டில் நகை, பணம் தேடியும் கிடைக்காததால், தனலட்சுமி அணிந்திருந்த ஒன்றரை சவரன் நகையை எடுத்துக்கொண்டனர்.
ஏற்கனவே திட்டமிட்டபடி, வாங்கி வைத்திருந்த பர்தாவை சந்திரஜோதி அணிந்த பின், வெளியேறி உக்கடம் சென்று, அங்கிருந்து வால்பாறை சென்று, நகையை அடமானம் வைத்தனர். பின், கோட்டூருக்கு சென்றனர். இருவரும் நகை, பணத்திற்காக திட்டமிட்டு, கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
நேற்று இருவரும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.