ADDED : மார் 03, 2026 06:05 AM
அன்னுார்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில், பொன்னே கவுண்டன்புதுாரில், இரண்டு நாள் கலை இரவு நடத்தப்பட்டது.
முதல் நாள் இரவு 7:00 மணிக்கு, திருப்பூர் அதிர்வுகள் கலைக்குழுவின் தப்பாட்டம், நெருப்பு நீர் சிலம்பம் நடத்தப்பட்டது. சேலம் தர்ஷன் குழுவின் அம்மன் நடனம், கோவிந்தராஜனின் மரக்கால் ஆட்டம் பிரமிக்க வைத்தது.
முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் கரீம் பேசுகையில், ''வெறுப்பு அரசியலை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மக்களை ஜாதி, மத ரீதியாக பிளவுபடுத்த அனுமதிக்க கூடாது,'' என்றார். இரண்டாம் நாள் இரவு 7:00 மணிக்கு தொலைக்காட்சி புகழ் லிம்போ கேசவனின் நெருப்பு சாகசம், கரூர் துர்காவின் நெருப்பு கரகாட்டம், விழுப்புரம் மல்லன் பயிற்சி மையத்தின் மல்லர் கம்பம் நிகழ்ச்சி ஆகியவை, பார்வையாளர்களை வியக்க வைத்தன. கல்வி மற்றும் விளையாட்டில், சாதித்தோர் கவுரவிக்கப்பட்டனர். மகேந்திரன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் அர்ஜுன் உட்பட பலர் பங்கேற்றனர்.
