/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவிநாசி ரோடு மேம்பாலத்தில் இரண்டு இரும்பு கர்டர் வச்சாச்சு! சனிக்கிழமை வரை பணி நடைபெறும்
/
அவிநாசி ரோடு மேம்பாலத்தில் இரண்டு இரும்பு கர்டர் வச்சாச்சு! சனிக்கிழமை வரை பணி நடைபெறும்
அவிநாசி ரோடு மேம்பாலத்தில் இரண்டு இரும்பு கர்டர் வச்சாச்சு! சனிக்கிழமை வரை பணி நடைபெறும்
அவிநாசி ரோடு மேம்பாலத்தில் இரண்டு இரும்பு கர்டர் வச்சாச்சு! சனிக்கிழமை வரை பணி நடைபெறும்
ADDED : ஜூலை 10, 2025 10:32 PM

கோவை; கோவை, அவிநாசி ரோடு மேம்பாலத்தில், ஹோப்ஸ் காலேஜ் பகுதியில், துாண்களுக்கு இடையே, இரண்டு இரும்பு கர்டர்கள் துாக்கி வைக்கப்பட்டுள்ளன.
இப்பணி, கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. அதில், ஹோப்ஸ் காலேஜ் ரயில்வே மேம்பாலம் பகுதியில், 52 மீட்டர் நீளத்துக்கு இரும்பு கர்டர் அமைக்க வேண்டியிருந்தது. ரயில்வே அனுமதி கிடைக்காமல் இருந்ததால், இவ்விடத்தில் மட்டும் ஓடுதளம் அமைக்க முடியாத சூழல் இருந்தது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சென்னை அரக்கோணம் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசி, மேம்பால கட்டுமான பணியை விளக்கினர். ரயில்வே அனுமதி கொடுத்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, கர்டர்கள் துாக்கி வைக்கப்பட்டன. மொத்தம் எட்டு கர்டர்கள் வைக்க வேண்டும். நாளொன்றுக்கு இரண்டு கர்டர்கள் வீதம் நான்கு நாட்கள் இப்பணி நடைபெறுகிறது. ஒவ்வொரு கர்டரும் தலா, 90 டன் எடை கொண்டது.
நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு துவங்கி, நேற்று காலை, 5:45 மணி வரை நடந்தது. ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டப்பிரிவு தலைமை பொறியாளர் கிருஷ்ணசாமி, கண்காணிப்பு பொறியாளர் ஜெயலட்சுமி, கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி ஆகியோர் கண்காணிப்பில், கர்டர் துாக்கி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 'ட்ரெய்லர்'கள் மூலம் கர்டர்கள் எடுத்து வரப்பட்டு, கிரேன் உதவியுடன் துாக்கி, வைக்கப்பட்டது. இதற்காக, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலை மார்க்கமாக வந்த வாகனங்கள், மாற்று வழித்தடத்தில் அனுப்பப்பட்டன. தற்போது, இரண்டு கர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'இரும்பு கர்டர் துாக்கி வைக்கும் பணி, சனிக்கிழமை வரை நடைபெறும். அதன்பின், கம்பி கட்டப்பட்டு, கான்கிரீட் கலவை ஊற்றப்படும்; 28 நாட்கள் 'கியூரிங்' காலகட்டம். அதன்பின், தார் ரோடு போடப்படும். அதன்பின், பக்கவாட்டுச்சுவர், மையத்தடுப்பு, மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஏறுதளம், இறங்கு தளங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. அதேநேரம், மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது. மையத்தடுப்பில் செடிகள் நடுவதற்கான ஆயத்தப்பணி, வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது' என்றனர்.

