/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.95 லட்சம் கடன் மோசடி : இருவருக்கு 4 ஆண்டு சிறை
/
ரூ.95 லட்சம் கடன் மோசடி : இருவருக்கு 4 ஆண்டு சிறை
ADDED : அக் 28, 2025 01:12 AM
கோவை: திருப்பூர், கே.பி.என்.காலனி, முதல் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.60. ஆர்.ஜி.எக்ஸ்போர்ட் என்ற பெயரில், தேங்காய் நார் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். தொழில் அபிவிருத்திக்கு, கோவை சாய்பாபா காலனியிலுள்ள இந்தியன் வங்கியில், 2008, மே 26ல், 95 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.
அடமானமாக கோவிந்தராஜின் நண்பரான, திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி,56, என்பவர் பெயரிலுள்ள, 1.49 ஏக்கர் தோட்டத்தின் ஆவணங்களை, கொடுத்து கடன் பெற்றார்.
பல ஆண்டுகளாகியும் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தவில்லை. இதனால், அடமானமாக வைத்த நிலத்தை ஏலத்தில் விட, வங்கி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. நிலத்தின் ஆவணங்களை சரிபார்த்தபோது, அடமானமாக கொடுத்த நிலத்தை ஏற்கனவே விற்றதும், பழைய பத்திரம் மற்றும் போலியான இ.சி., போலி வரி ரசீது ஆகியவற்றை, வங்கியில் கொடுத்து கடன் வாங்கி, மோசடி செய்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக, 2010ல், வங்கி அதிகாரிகள் சி.பி. ஐ.,யிடம் புகார் அளித் தனர். சி.பி.ஐ.விசாரித்து, இருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் மீது, 2011ல், கோவை சி.ஜே.எம். கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சிவகுமார், குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தராஜ், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருக்கு, தலா 4 ஆண்டு சிறை, தலா 15,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் சுரேந்திர மோகன் ஆஜரானார்.

