/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
இருசக்கர வாகனங்கள் தாறுமாறு; கோவை ரோட்டில் விபத்து அபாயம்
/
இருசக்கர வாகனங்கள் தாறுமாறு; கோவை ரோட்டில் விபத்து அபாயம்
இருசக்கர வாகனங்கள் தாறுமாறு; கோவை ரோட்டில் விபத்து அபாயம்
இருசக்கர வாகனங்கள் தாறுமாறு; கோவை ரோட்டில் விபத்து அபாயம்
ADDED : செப் 07, 2025 09:15 PM

ரோட்டோரத்தில் குப்பை பொள்ளாச்சி, ராஜா மில் ரோடு, கட்டபொம்மன் வீதியில் ரோட்டோரம் குப்பை போடப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியில் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. இத்துடன் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் இதை கவனித்து உடனடியாக குப்பையை அகற்ற வேண்டும்.
- ஷாஜகான், பொள்ளாச்சி.
வேகத்தடை வேண்டும் பொள்ளாச்சி, மாப்பிள்ளைக்கவுண்டன்புதூர் அரசு துவக்கப்பள்ளி அருகே, ரோட்டில் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாக பயணிப்பதால், மாலை நேரத்தில் பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள் ரோட்டை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, பள்ளி அருகில் வாகன வேகத்தை குறைக்க தொடர் வேகத்தடை அமைக்க, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ஜான், பொள்ளாச்சி.
ரோட்டில் கழிவு நீர் கிணத்துக்கடவு, தாமரைக்குளம் சர்வீஸ் ரோட்டில் நீண்ட காலமாக கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதனால், மக்கள் அவ்வழியில் செல்ல சிரமப்படுகின்றனர். அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து, கால்வாய் அமைக்க விரைவில் முன் வரவேண்டும்.
- மனோகரன், கிணத்துக்கடவு.
ரோடு படுமோசம் பொள்ளாச்சி -- பல்லடம் ரோட்டில் இருந்து மகாலிங்கபுரம் செல்லும் ரோட்டில், ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். எனவே, இந்த ரோட்டில் சேதமடைந்த பகுதியை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-- அருண், பொள்ளாச்சி.
மின்கம்பத்தை அகற்றுங்க! நெகமம் - கொண்டேகவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில், வளைவு பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், இவ்வழியில் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. உடனடியாக இந்த மின் கம்பத்தை அகற்றம் செய்ய வேண்டும்.
- ஜெய்குமார், நெகமம்.
வாகனங்கள் தாறுமாறு பொள்ளாச்சி -- கோவை ரோட்டில், இருசக்கர வாகனங்கள் ரோட்டின் ஓரத்தில் செல்ல வேண்டும். ஆனால், ரோடு முழுவதிலும் இருசக்கர வாகனங்கள் பரவலாக, எவ்வித போக்குவரத்து விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ரோட்டின் ஓரத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- சந்துரு, பொள்ளாச்சி.
சந்திப்பில் விபத்து அபாயம் உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு சந்திப்பில், தாறுமாறாக வாகனங்களை திருப்புகின்றனர். இதனால், பொள்ளாச்சி நோக்கி செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. போக்குவரத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரமோகன், உடுமலை.
பள்ளத்தில் தேங்கிய கழிவுகள் உடுமலை கழுத்தறுத்தான் பள்ளத்தில், பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக கொட்டுகின்றனர். சில இடங்களில் கழிவு நீர் செல்லாத அளவுக்கு கழிவுகள் குவிந்து கிடப்பதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அருகிலுள்ள குடியிருப்புகளில் நோய் பரவும் அபாயம் உள்ளது.
-மணிவண்ணன், உடுமலை.
சாயும் பேனர்களால் அவதி உடுமலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பல்வேறு இடங்களில், வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால், மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மக்கள் நடமாடும் இடங்களில் அதிக காற்றுக்கு தாக்குபிடிக்காமல் சாயும் பேனர்களால் விபத்து அபாயம் உள்ளது.
-சதாசிவம், உடுமலை.
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் உடுமலை உழவர் சந்தை முன்பு காலை நேரங்களில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி கொள்வதால், அவ்வழியாக பிற வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்னைக்கு நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணகுமார், உடுமலை.
குடி'மகன்களால் தொல்லை உடுமலை ரயில்வே ஸ்டேஷன் கட்டடத்தின் பின்புறம், இரவு நேரங்களில் தஞ்சமடையும் குடிமகன்கள், காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசிச்செல்கின்றனர். கீழே கிடக்கும் கண்ணாடி துகள்களால், பயணியர் காயமடைந்து வருகின்றனர்.
-ராஜேஸ்குமார், உடுமலை.