/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளிடம் அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்
/
குழந்தைகளிடம் அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்
ADDED : பிப் 05, 2025 12:53 AM
கோவை; குழந்தைகள் மத்தியில், 'டைப்1' சர்க்கரை நோய் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர் ஆரம்ப நிலை அறிகுறிகளை அறிந்து, உரிய சிகிச்சை உடனடியாக அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நினைத்ததை உண்ண முடியாமலும், நாள் ஒன்றுக்கு நான்கு ஊசிகள் செலுத்திக்கொண்டும், கட்டுப்பாடான உணவு பழக்கம் என்று வாழும் குழந்தைகளின் நிலையும், அவர்களின் பெற்றோர் நிலையும் பெரும் பாடாகவுள்ளது.
இதுகுறித்து, இந்திய குழந்தை நலக் குழுமம், தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரிவு தலைவர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:
டைப்1 சர்க்கரை நோய் குழந்தைகளையும், இளைஞர்களையும் அதிகம் பாதிக்கின்றது. இன்சுலின் உற்பத்தி செல்களை அழிப்பதால், இப்பாதிப்பு ஏற்படுகிறது. இப்பாதிப்பு உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் இன்சுலின் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளை பொறுத்தவரையில், அதிக தாகம், அதிக சிறுநீர் கழித்தல், குறிப்பாக, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் எடை காரணமின்றி குறைதல், பலவீனம், சோர்வு, அதிக பசி, தோல் மற்றும் சிறுநீர் சார்ந்த தொடர் தொற்றுநோய்கள், இதன் ஆரம்ப அறிகுறிகள்.
டாக்டரிடம் தெரிவிக்காமல், அலட்சியமாக இருந்தால், 'டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ்' என்னும் ஆபத்தான நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. மரபியல் காரணிகள், குறிப்பிட்ட வைரஸ் தொற்றுக்கள், சில உணவு பழக்கவழக்கங்கள் போன்றவை, இதற்கு காரணமாக அமைகிறது.
இப்பாதிப்பு ஏற்பட்டவர்கள், தினசரி இன்சுலின் மருந்து, தொடர் ரத்த சர்க்கரை கண்காணிப்பு, உணவு கட்டுப்பாடு, தொடர்ச்சியான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். இப்பாதிப்பை முழுமையாக குணப்படுத்த இயலாது; தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
இப்பாதிப்பு உள்ள குழந்தைகளின் பெற்றோர் மட்டுமின்றி, பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் இன்சுலின் ஊசி செலுத்துதல், குழந்தைகளுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கட்டாயம் பயிற்சி அளிக்க வேண்டும்.
பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சரியான விழிப்புணர்வும், மேம்பட்ட சிகிச்சை வாயிலாகவும், டைப்1 பாதிப்புள்ள குழந்தைகள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
குழந்தைகளை பொறுத்தவரையில், அதிக தாகம், அதிக சிறுநீர் கழித்தல், குறிப்பாக, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் எடை காரணமின்றி குறைதல், பலவீனம், சோர்வு, அதிக பசி, தோல் மற்றும் சிறுநீர் சார்ந்த தொடர் தொற்றுநோய்கள், இதன் ஆரம்ப அறிகுறிகள்.