ADDED : ஏப் 15, 2026 08:43 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தனியார் பள்ளி அருகே உள்ள 'யு டேர்ன்' பகுதியை மாற்றியமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் அதிக அளவில் வாகன போக்குவரத்து உள்ளது. இதில், கிணத்துக்கடவு தனியார் பள்ளி அருகே உள்ள 'யு டேர்ன்' வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திரும்பி செல்கிறது. இது மட்டுமின்றி, சிலர் 'ஒன் வே' திசையில் பயணித்து 'யு டேர்ன்' பகுதியில் ரோட்டை கடந்து செல்கின்றனர்.
இந்த, 'யு டேர்ன்' பகுதி, ரோட்டின் தாழ்வான இடத்திலும், பள்ளி அருகாமையிலும் இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாரத்திற்கு, ஒரு முறையாவது விபத்து நடப்பது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் உயிரிழப்பு விபத்து ஏற்படுகிறது.
விபத்தை தடுக்க போலீசார் ஆங்காங்கே டிவைடர்கள் வைத்தாலும், அதை சிலர் அகற்றம் செய்கிறார்கள். இதைத் தவிர்க்க, இங்குள்ள 'யு டேர்ன்' பகுதியை அடைத்து விட்டு, மாற்று இடத்தில் புதிதாக அமைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே வாகன விபத்தை தடுக்க முடியும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
