/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உக்கடம் மேம்பாலம்: லஞ்ச ஒழிப்பு துறை வழக்கின் பின்னணி
/
உக்கடம் மேம்பாலம்: லஞ்ச ஒழிப்பு துறை வழக்கின் பின்னணி
உக்கடம் மேம்பாலம்: லஞ்ச ஒழிப்பு துறை வழக்கின் பின்னணி
உக்கடம் மேம்பாலம்: லஞ்ச ஒழிப்பு துறை வழக்கின் பின்னணி
ADDED : அக் 23, 2025 11:39 PM

கோவை: உக்கடம் வழியாக செல்லும் சேலம் - கொச்சி சாலை தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. அதில், ஆத்துப்பாலம் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால், மேம்பாலம் கட்ட அ.தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்டது. உக்கடம் - ஆத்துப்பாலம் வரை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரித்து, மாநில நெடுஞ்சாலை துறை மூலமாக செயல்படுத்த, தேசிய நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி கோரப்பட்டது.
அப்போது ஆத்துப்பாலத்தில் சுங்கச்சாவடி இருந்ததால், கரும்புக்கடை வரை மட்டுமே மேம்பாலம் கட்ட ஒப்புதல் தரப்பட்டது. முதல்கட்டமாக, 1.46 கி.மீ. துாரத்துக்கு கரும்புக்கடை வரை மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து நெருக்கடி குறையாது என்பது அரசின் கவனத்துக்கு தெரியவந்தது.
சுங்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்திடம் பேச்சு நடத்தி, அதை அகற்றி விட்டு, ஆத்துப்பாலம் வரையும், சுங்கம் சந்திப்பில் இருந்து வாலாங்குளம் ரோட்டில் வருவோரும் மேம்பாலத்தை பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு மாற்றப்பட்டு, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பாலத்துக்காக 481.95 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
உக்கடம் முதல் கரும்புக்கடை வரை ஒரு நிறுவனம், கரும்புக்கடையில் இருந்து ஆத்துப்பாலம் சந்திப்பு வரையும், வாலாங்குளம் ரோடு இறங்கு தளமும் இன்னொரு நிறுவனம் என பாலம் கட்டும் பணி பிரித்து கொடுக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் பணி துவங்கி, 2024ல் முடிக்கப்பட்டு, ஆக. 9ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அ.தி.மு.க. ஆட்சி காலத்தின் கடைசி நேரத்தில் கோரப்பட்ட டெண்டர்களில் முறைகேடு நடந்திருக்கிறதா என தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். தீவிரமாக ஆய்வு செய்தனர். மேம்பால கட்டுமானத்தில் எந்த முறைகேடும் இல்லை என தெரிந்தது. உக்கடம் முதல் கரும்புக்கடை வரை அமைத்த சாலை, விரைவிலேயே சேதமானதால், அதை சரி செய்ய ரூ.25.54 லட்சம் செலவானது. அந்த தொகை அரசுக்கு தேவையில்லாமல் ஏற்படுத்தப்பட்ட இழப்பு என்று கூறி இப்போது அரசு வழக்கு பதிந்திருக்கிறது.
இது தி.மு.க. அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். “முறைகேடு இல்லை என்று ஆய்வில் தெரிந்த பிறகும், பழனிசாமிக்கும் வேலுமணிக்கும் ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாலரை ஆண்டுகள் கழித்து, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வாறு செய்திருப்பதில் உள்ள நோக்கத்தை கோவை மக்கள் புரிந்து கொள்வார்கள்” என அவர்கள் கூறினர்.
சாலை மோசமானது ஏன்? கட்டி முடித்த உடனே சாலை சேதமானது குறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:
உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டுமானம் நடந்தபோதே, சாலையின் இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. ஒரு சாலையின் ஆயுள் காலம் ஐந்தாண்டுகள். உக்கடம் முதல் கரும்புக்கடை வரை மேம்பாலம் கட்டிய உடனே அந்த சாலை புதுப்பிக்கப்பட்டது. மேம்பாலத்தை நீட்டிக்கும் திட்டத்தை நிறைவேற்றிய ஒப்பந்த நிறுவனத்தின் கட்டுமான வாகனங்கள் அந்த சாலையைத்தான் பயன்படுத்தின.
மேம்பாலத்தின் ஒரு பகுதி மட்டுமே முடிந்திருந்ததால், அனைத்து வாகனங்களும் சாலை மார்க்கமாகவே பயணித்தன. வாகன போக்குவரத்தின் ஒரு பகுதி மேம்பாலத்திலும், மற்ற வாகனங்கள் சாலையிலும் சென்றிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.எல்லா வாகனங்களும் சாலையை பயன்படுத்தியதால் சில இடங்களில் சேதமானது. அந்த பகுதிகள் செப்பனிடப்பட்டன. அதற்கு செலவிட்ட தொகையை இழப்பு என்று கூறமுடியாது. சாலையை பயன்படுத்திய வாகனங்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால், இது புரியும்.
இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

