/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு குடைகள் 'ரெடி'
/
துாய்மை பணியாளர்களுக்கு குடைகள் 'ரெடி'
ADDED : ஜூலை 14, 2025 11:39 PM

கோவை; துாய்மை பணியாளர்களுக்கு, சோதனை அடிப்படையில் தோள்பட்டையில் அணியும் குடைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பயன்படுத்த ஏதுவாக இருப்பின் அனைவருக்கும் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை மாநகராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட நிரந்தர துாய்மை பணியாளர், 4,650 ஒப்பந்த பணியாளர்கள், 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர். குப்பை சேகரிக்கும் பணி தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த, மே மாதம் தொடர் மழை பெய்தது. மழைக்கு மத்தியிலும் சுகாதாரம் காக்கும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு ரெயின் கோட், ஷூ போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால், சளி, காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுவதாக புலம்பினர்.
'தினமலர்' நாளிதழில் செய்தி
நிரந்தர பணியாளர்களுக்கு போன்று தங்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ஒப்பந்த பணியாளர் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, மே 29ம் தேதி 'ஏன் இந்த பாரபட்சம்' என்ற தலைப்பில் நமது நாளிதழில் செய்தி வெளியானது.
அன்றைய தினமே துாய்மை பணியாளர் அனைவருக்கும் ரெயின் கோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், மழை மட்டுமின்றி, வெயில் காலத்திலும் பாதிப்புகளை சமாளிக்கும் விதமாக கைகளில் பிடிக்காது, தோள் பட்டையில் அணிந்து கொள்ளும் வகையிலான குடைகள், தற்போது துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பரிட்சார்த்த அடிப்படையில், 20 துாய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2,000 மதிப்பில் இக்குடைகள் நேற்று வழங்கப்பட்டன.
களத்தில் பயன்பாடு, திருப்தி போன்ற நிறை, குறைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் வழங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.