/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு அலுவலகங்களுக்கு அறிவிக்கப்படாத 'லீவு!'
/
அரசு அலுவலகங்களுக்கு அறிவிக்கப்படாத 'லீவு!'
ADDED : ஜூலை 25, 2025 09:21 PM

அன்னுார்; 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமால், அன்னுார் தாலுகாவில் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அன்னுார் தாலுகாவில், 'உங்களுடன் ஸ்டாலின்' ஐந்தாம் கட்ட முகாம் கணுவக்கரையில் நேற்று நடந்தது.
இதில் மாவட்ட, வட்ட மற்றும் ஒன்றிய அளவிலான 15 துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இத்துடன் கணுவக்கரை மற்றும் பிள்ளையப்பம்பாளையத்தில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட துறைகள் சார்பில் 'உழவரைத் தேடி' என்னும் முகாம் நடந்தது.
இந்த இரு முகாம்களால், அன்னுாரில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும்பாலான அலுவலர்கள் முகாம்களுக்கு சென்று விட்டதால், குடிநீர் பிரச்னை, 100 நாள் வேலைத்திட்ட கோரிக்கை உள்ளிட்டவைகளுக்காக வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அன்னுார் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், உதவியாளர்கள் என அனைவரும் முகாமுக்கு சென்றுவிட்டனர்.
ஆதார் சேவை மையமும் செயல்படவில்லை. இதனால் ஏராளமான மக்கள் அன்னுார் தாலுகா அலுவலகம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். இதேபோல் வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலகங்களும் வெறிச்சோடின.

