/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டமாக பூமிக்கடியில் 'கேமரா ரேடார் ஷூட்டிங்'
/
மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டமாக பூமிக்கடியில் 'கேமரா ரேடார் ஷூட்டிங்'
மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டமாக பூமிக்கடியில் 'கேமரா ரேடார் ஷூட்டிங்'
மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டமாக பூமிக்கடியில் 'கேமரா ரேடார் ஷூட்டிங்'
ADDED : ஏப் 02, 2025 07:09 AM
கோவை : கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும், மெட்ரோ ரயில் சர்வே பணிகளில், தற்போது நவீன ' கேமரா ரேடார் ' பயன்படுத்தப்படுகிறது. இந்த கேமரா ரேடார், பூமிக்கடியில் உள்ள நிலவரத்தை துல்லியமாக காண்பித்து விடும் என்கின்றனர், மெட்ரோ அதிகாரிகள்.
கோவை சத்தி சாலையில், 14.4 கி.மீ., தொலைவுக்கு வலியாம்பாளையம் பிரிவு வரை, மெட்ரோ ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க கட்டமைப்பு பணிகளுக்கு முன்னதாக, ஆய்வு பணிகளை மெட்ரோ நிறுவனம் துரிதப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நெடுஞ்சாலை, வருவாய், மாநகராட்சி, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், மெட்ரோ ரயில்வே துறை அதிகாரிகள் பங்கேற்ற, கலந்தாலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் தலைமையில் நடந்தது.
கோவையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமையும் விதம், எந்தெந்த சாலைகளில் வழித்தடம் அமைக்கப்படும், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன, தற்போது மேற்கொண்டுள்ள பணிகள் என்ன என்பது குறித்து, அதிகாரிகள் விளக்கினர்.
முதற்கட்டமாக கோவை - சத்தி சாலையிலுள்ள டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து சூர்யா மருத்துவமனை வரை உள்ள 1.2 கி.மீ.,தொலைவுக்கு, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்திக் கொடுக்க, 154 கோடி ரூபாயை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.
தற்போது நிலத்திற்குள் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள், கேபிள்கள், புதைமின்வடங்கள் குறித்த தகவல்களை, வீடியோ மற்றும் வரைபடத்துடன் கண்டறிய, 'கேமரா ரேடார்' பயன்படுத்தப்படவுள்ளது.
மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து, சூர்யா மருத்துவமனை வரை, பணிகளை வேகமாக துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 1.2 கி.மீ.,தொலைவுக்கு, நவீன கேமரா ரேடார் பயன்படுத்தி, நிலத்தின் அடியில் உள்ள நிலவரத்தை ஆய்வு செய்து, படம் மற்றும் வீடியோ எடுக்கப்படும். அதன் பின், அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெறும். இறுதியாக கட்டுமானப்பணிகள் துவங்கும்' என்றனர்.

