ADDED : பிப் 24, 2026 04:50 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் தனித்துவ அடையாள எண் பெறாத, 306 விவசாயிகளுக்கு பதிவு செய்ய வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெற, நில உடமை ஆவணங்களை பதிவு செய்து, விவசாய அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை, தங்களது நில உடமை விபரங்களை, வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை துறை கள அலுவலர்களை தொடர்பு கொண்டு, தங்களது நில உடமை ஆவணங்களை அந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்து, அடையாள எண் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 85 ஆயிரத்து 429 விவசாயிகளில், 77 ஆயிரத்து 291 விவசாயிகள் மட்டுமே நில உடமை பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில், 8,138 விவசாயிகள் பதிவு செய்யவில்லை. அடையாள எண் இல்லாத விவசாயிகள், வரும் காலங்களில் மானிய தொகை பெற இயலாது.
பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் பயன் பெற இந்த அடையாள எண் அவசியம். எனவே, அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் அணுகி, தனித்துவ அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், 306 விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறவில்லை. அவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.
