/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பில்லாத அரசு டவுன் பஸ்கள்... நடுவழியில் நிற்குது! பயணியர் மற்றும் ஊழியர்கள் தவிப்பு
/
பராமரிப்பில்லாத அரசு டவுன் பஸ்கள்... நடுவழியில் நிற்குது! பயணியர் மற்றும் ஊழியர்கள் தவிப்பு
பராமரிப்பில்லாத அரசு டவுன் பஸ்கள்... நடுவழியில் நிற்குது! பயணியர் மற்றும் ஊழியர்கள் தவிப்பு
பராமரிப்பில்லாத அரசு டவுன் பஸ்கள்... நடுவழியில் நிற்குது! பயணியர் மற்றும் ஊழியர்கள் தவிப்பு
ADDED : டிச 31, 2024 06:45 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள், அடிக்கடி 'மக்கர்' ஆகி நடுவழியில் நின்று விடுவதால், பஸ் ஊழியர்களும், பயணியரும் அவதிக்குள்ளாகின்றனர்.
பொள்ளாச்சியில் உள்ள, அரசு போக்குவரத்து கழகத்தில் மூன்று பணிமனைகளில் இருந்து, 85 அரசு டவுன் பஸ்கள் உள்ளூர் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் ஒவ்வொன்றும், நாள் ஒன்றுக்கு, 280 முதல் 340 கி.மீ., துாரம் வரை இயக்கப்படுகின்றன.
இந்த டவுன் பஸ்களை நம்பியே, சுற்றுப்பகுதி கிராம மக்கள், அலுவலகம், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, போதிய பராமரிப்பின்றி இயக்கப்படும் டவுன் பஸ்களால், பயணியர் பரிதவித்து வருகின்றனர். பெரும்பாலான பஸ்கள், நகர்ந்தால் போதும் என்ற நிலையில் உள்ளன.
தீராத பிரச்னை
சில பஸ்களில் இருக்கைகள், ஜன்னல்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது. பஸ்களின் உட்புறத்தை தினமும் சுத்தம் செய்வதும் கிடையாது. இதுஒருபுறமிருக்க, நடுவழியில், பஸ்கள் அடிக்கடி 'மக்கர்' ஆகி நின்று விடுவதும், 'ஸ்டார்ட்' ஆகாமல் பயணியர் ஒன்றிணைந்து பஸ்சை தள்ளி விட்டு, இயக்கச் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
அதிலும், நடுவழியில் பழுதாகி நிற்கும்போது, மாற்று பஸ் வரும் வரை ரோட்டில் பயணியர் கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் அந்தந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டிய மக்கள், தவிப்புக்கு உள்ளாகின்றனர். பஸ் பழுதாகி விட்டால், அடுத்தடுத்த 'டிரிப்' கிராமங்களுக்கு இயக்கப்படுவதில்லை. இதனால், வரும் என, காத்திருக்கும் பயணியர் அவதிப்படுகின்றனர்.
பராமரிப்பில்லை
கிராம மக்கள் கூறியதாவது:
பெரு நகரங்களில், 'மப்சல்' பஸ்களாக ஓடிய பஸ்களே, தாலுகா அளவிலான நகரில் டவுன் பஸ்களாக இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில், மழையின்போது, தண்ணீர் ஒழுகுவதும், இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாதது, ஸ்டார்ட் ஆகாதது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கின்றன. அவ்வப்போது, சில வழித்தடங்களில் முறையாக பஸ்கள் இயக்கப்படுவதும் கிடையாது. இதனால், மக்கள் பலரும், சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை நம்பியே அதிக மக்கள் உள்ளனர். அதனால், அனைத்து டவுன் பஸ்களையும் முறையாக பராமரித்து இயக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
கண்காணிப்பு தேவை
டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கூறியதாவது:
பணிமனைகளில், பஸ்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் கிடையாது. பஸ்சில் ஏதேனும் பழுதை சரி செய்ய குறிப்பிட்டால், அதற்கு மாறாக வேறு பஸ்சை இயக்கச் செய்கின்றனர். 'செல்ப்' மோட்டார் இன்றி பஸ்கள் இயக்கும் டிரைவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
காரணம், காலையில் இன்ஜின் ஸ்டார்ட் செய்யப்படும் பஸ், பணிமனை சென்று நிறுத்தும் வரை, 'ஆப்' செய்யப்படுவதில்லை. இதனால், டீசல் விரயமாகி வருகிறது. அதேநேரம், பணிமனையில், அளவுக்கு மீறி டீசல் பிடித்தால், டிரைவர் மீது நடவடிக்கை பாய்கிறது.
சமீபகாலமாக, பழுது சரி செய்யாமல், பஸ்களை மாற்றி இயக்கவே நிர்பந்தம் செய்யப்படுகிறது. அத்தகைய பஸ்களை எடுத்துச் செல்லும் போது, நடுவழியில் நின்று விடுகிறது. மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். துறை ரீதியான உயரதிகாரிகள் கண்காணித்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.