/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திட்டமிடல் இன்றி நடத்தப்பட்ட பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
/
திட்டமிடல் இன்றி நடத்தப்பட்ட பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
திட்டமிடல் இன்றி நடத்தப்பட்ட பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
திட்டமிடல் இன்றி நடத்தப்பட்ட பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
ADDED : அக் 02, 2024 07:51 AM

கோவை : கோவையில் நேற்று நடத்திய சிறப்பு முகாமில், பட்டா மாறுதல் மற்றும் நில அளவை பதிவேடு நகல் கேட்டு, 863 பேர் விண்ணப்பம் கொடுத்தனர். போதிய வழிகாட்டுதல் இல்லாததால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
கோவை மாநகராட்சி சார்பில், சில நாட்களுக்கு முன், 'மக்களைத் தேடி மாநகராட்சி' என்கிற சிறப்பு முகாம், 83வது வார்டில் நடத்தப்பட்டது. பட்டா மாறுதல் மற்றும் நில அளவை பதிவேடு நகல் கேட்டு ஏராளமானோர் மனு கொடுத்தனர்.
அதனால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, மசக்காளிபாளையம் ஹர்ஷா மகாலில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. துணை கமிஷனர் சிவக்குமார், நில அளவைத்துறை உதவி இயக்குனர் சரவணன், கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி முன்னிலை வகித்தனர். முகாமை கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார்.
கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 20 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். நில அளவை பதிவேடு நகல் கேட்டு ஏராளமானோர் வந்தனர். போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை; சரியான வழிகாட்டுதல் வழங்கப்படவில்லை.
இ-சேவை மைய ஊழியர்கள் விண்ணப்பம் பெற்றுக் கொண்டு, பணம் பெற்று, ஒப்புகைச்சீட்டு வழங்கினர். உடனடியாக, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, ஆன்-லைன் எண் வழங்காததால், விண்ணப்பம் கொடுத்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். மொத்தம், 863 மனுக்கள் பெறப்பட்டு, நில அளவைத்துறையில் வழங்கப்பட்டது.
விண்ணப்பதாரர்கள் கூறுகையில், 'அதிகமான கூட்டம் முகாம்களுக்கு வருகிறதென்றால், அரசு துறை அலுவலகங்களில் மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு, தீர்வு கிடைப்பதில்லை என்பதே அர்த்தம். அதை அரசு துறை உயரதிகாரிகள் புரிந்து செயல்பட வேண்டும். இனி நடத்தும் முகாம்களை திட்டமிட்டு, பதிவேடு பராமரித்து, சரியான வழிகாட்டுலுடன் நடத்த வேண்டும்' என்றனர்.

