/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழுக்கு மரம் ஏறி அசத்திய பெண்கள்
/
வழுக்கு மரம் ஏறி அசத்திய பெண்கள்
ADDED : ஜன 18, 2024 01:22 AM

அன்னுார் : அல்லிக்காரம்பாளையத்தில் நடந்த கிராமிய பொங்கல் விழாவில், முதல் முறையாக மகளிர் வழுக்கு மரம் ஏறி அசத்தினர்.
அல்லிக்காரம் பாளையத்தில், கிராமிய பொங்கல் விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. கோலம், ஓட்டம், பலூன் உடைத்தல், ஓவியம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன. இரண்டு நாட்களும், மாலையில் இசை நிகழ்ச்சி,காமெடி, பல குரல் நிகழ்ச்சி, மேஜிக் ஷோ மற்றும் குழந்தைகள் நடனம் நடந்தது.
நேற்று காலை துவக்கப்பள்ளி முன்புறம் நிறுவப்பட்ட 35 அடி உயர வழுக்கு மரத்தில் ஏறும் போட்டி துவங்கியது. வழுக்கு மரத்தின் உச்சியில் 8,100 ரூபாய் ரொக்கம் வைக்கப்பட்டிருந்தது. முதல் முறையாக பெண்கள் 10 பேர் குழுவாக சேர்ந்து, பிரமிடு போல் கீழே 5 பேர், அதற்கு மேல் இருவர், அதற்கு மேல் ஒருவர் என வழுக்கு மரத்தில் ஏறி உச்சியை தொட முயன்றனர். எனினும் 20 அடி உயரத்திற்கு மட்டுமே செல்ல முடிந்தது.
வழுவழுக்கும் திரவம் வழுக்கு மரத்தில் தேய்க்கப்பட்டிருந்ததால் நீண்ட நேரம் போராடியும் 20 அடிக்கு மேல் செல்ல முடியவில்லை. எனினும் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முதல்முறையாக வழுக்கு மரம் ஏறிய பெண்கள் குழுவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் 5 மணி நேரம் 11 அணிகள் போராடியும் உச்சியை தொடமுடியவில்லை. இதையடுத்து விழா கமிட்டியினர் உச்சியில் கட்டப்பட்ட தொகை கோவில் கமிட்டிக்கு சேர்ந்து விடும் என்றனர். இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஒருங்கிணைப்பாளர் கலைவாணன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.