/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ரூ.12 கோடி 'ரிசர்வ் சைட்' நிலங்களை மீட்காமல் நகரமைப்பு பிரிவு அலட்சியம்
/
ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ரூ.12 கோடி 'ரிசர்வ் சைட்' நிலங்களை மீட்காமல் நகரமைப்பு பிரிவு அலட்சியம்
ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ரூ.12 கோடி 'ரிசர்வ் சைட்' நிலங்களை மீட்காமல் நகரமைப்பு பிரிவு அலட்சியம்
ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ரூ.12 கோடி 'ரிசர்வ் சைட்' நிலங்களை மீட்காமல் நகரமைப்பு பிரிவு அலட்சியம்
ADDED : ஜூலை 17, 2025 10:30 PM
கோவை; கோவையில் ரூ.12 கோடி மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான அவ்விடங்கள், சிங்காநல்லுார் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
கோவை மாநகராட்சி, 52வது வார்டு அண்ணா நகர் அருகில் உள்ள ஈ.வெ.ரா., நகர் மனைப்பிரிவு நகர ஊரமைப்பு துறையால், 5.17 ஏக்கருக்கு, 50 மனைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில், 10 சதவீத பொது ஒதுக்கீடாக, குழந்தைகள் விளையாடும் இடமாக, 11 சென்ட் ஒதுக்கப்பட்டது. அவ்விடத்தை சிலர் ஆக்கிரமித்து வழித்தடமாக பயன்படுத்துகின்றனர்.
மற்றொரு இடத்தில், 28 சென்ட் பொது ஒதுக்கீடு இடத்தை ஆக்கிரமித்து ஒர்க் ஷாப், குடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டு இருக்கிறது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களின் பட்டா, மாநகராட்சி கமிஷனரின் பெயரில் இருக்கிறது. இதுதொடர்பாக, நகர ஊரமைப்பு துறை வழங்கிய வரைபட நகல் மற்றும் ஐகோர்ட் டிவிசன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு நகல் இணைத்து, தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தினர், மாநகராட்சி கமிஷனருக்கு புகார் அனுப்பினர். இதன்பின், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நகரமைப்பு அலுவலர் குமார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
கிழக்கு மண்டல உதவி கமிஷனர் தலைமையிலான அலுவலர்கள் கள ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை உறுதி செய்து, அவற்றை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால், அவர்களிடம் உள்ள ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மாநகராட்சிக்கு சொந்தமான, 2,416 சதுரடி பொது ஒதுக்கீடு இடத்தை ஆறுமுகம் என்பவரும், 2,430 சதுரடி பொது ஒதுக்கீடு இடத்தை கதிர்வேலு என்பவரும் சிங்காநல்லுார் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையப் பத்திரம் பதிவு செய்திருப்பது தெரியவந்தது. பொது ஒதுக்கீடு இடத்துக்கு, 2006ல் மனை வரன்முறை உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மனை வரன்முறை உத்தரவு மாநகராட்சியால் ரத்து செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகளின் சட்டப்பிரிவு 128(2)-ன்படி, ஆக்கிரமிப்பாளர்கள் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு பதியப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதற்கான செலவுகள் வசூலிக்க வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டிருக்கிறார். இதன் நகல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள பொது ஒதுக்கீடு இடங்களில் தற்போதைய சந்தை மதிப்பு, 12 கோடி ரூபாய் இருக்குமென மதிப்பிடப்பட்டு உள்ளது. கமிஷனர் உத்தரவிட்டு, இரண்டு மாதங்களாகியும், ஆக்கிரமிப்பை இன்னும் அகற்றாமல், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் வேடிக்கை பார்க்கின்றனர்.