/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார்பன் அளவைக் கூட்டும் 'ஹியூமிக்' அமிலம் அரசே விற்பனை செய்ய வலியுறுத்தல்
/
கார்பன் அளவைக் கூட்டும் 'ஹியூமிக்' அமிலம் அரசே விற்பனை செய்ய வலியுறுத்தல்
கார்பன் அளவைக் கூட்டும் 'ஹியூமிக்' அமிலம் அரசே விற்பனை செய்ய வலியுறுத்தல்
கார்பன் அளவைக் கூட்டும் 'ஹியூமிக்' அமிலம் அரசே விற்பனை செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜன 20, 2025 06:57 AM
கோவை, : மண்ணில் கார்பன் அளவைக் கூட்டி வளத்தைப் பெருக்கும் ஹியூமிக் அமிலத்தை, வேளாண் துறை வாயிலாக வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹியூமிக் அமிலம் என்பது பூஞ்சாணம், நிலத்தடி நீர், புதைபொருட்களின் சிதைவுகளால் உருவாகும் அமிலங்கள் சேர்ந்த கலவை.
இந்த அமிலத்தை, களி மண்ணில் தெளித்தால், மண் இலகுவாகி, நீர் உட்கிரகிக்கும் திறன் அதிகரிக்கிறது.
பயிர்களின் வேர் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். மணற்பாங்கான இடத்தில் தெளிக்கும்போது, தேவையான அங்ககப் பொருட்களைச் சேர்த்து நீர் தேக்கும் திறன் அதிகரிக்கிறது.
இதனால், மண்ணில் இருந்து சத்துகள் வெளியேறுவது தடுக்கப்பட்டு, பயிர்களுக்குத் தேவையான சத்துகளை, எளிதில் உறிஞ்ச வகை செய்யப்படுகிறது.
நன்மை செய்யும் நுண்ணுயிரிகளுக்கு, ஹியூமிக் அமிலம் உணவாகிறது. இதன் முக்கிய பயன் ரசாயன உரத்தின் பயன்பாடு, பாதிப்புகளைக் குறைப்பதாகும்.
இந்த ஹியூமிக் அமிலத்தை, மாநில உழவர் நலத்துறை வாயிலாக அனைத்து விவசாயிகளுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, விவசாயிகள் கூறியதாவது:
ரசாயன உரங்களின் அதிக பயன்பாட்டால், மண் வளம் பாதிக்கிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதிக்கின்றன. நுண்ணுயிர்களுக்கு நிறைய கார்பன் தேவைப்படுகிறது.
நிலத்தில் கார்பன் அளவை அதிகரிக்க, மக்கிய குப்பை, தொழு உரம் கிடைக்காத போது, ஹியூமிக் அமிலம் போன்றவற்றைப் பயன்படுத்தி, கார்பன் அளவைக் கூட்ட முடியும்.
இந்த ஹியூமிக் அமிலம், சந்தையில் வெவ்வேறு தரங்களில், வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் தரத்தை உறுதிப்படுத்த முடியாமல், விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த அமிலம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், அளவுக்கு அதிகமாகவே கிடைப்பதாகத் தெரிகிறது. எனவே, மாநில அரசு, உழவர் நலத்துறை வாயிலாக, ஹியூமிக் மற்றும் பால்விக் அமிலங்களை, குறைந்த விலையில் தரமானதாக, விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
இதனால், ரசாயனப் பயன்பாடு குறைந்து, மண் வளம் பாதுகாக்கப்படும். விவசாயிகளுக்கும் இடுபொருள் செலவு குறையும். மக்களுக்கும் ஆரோக்கியமான உணவு தானியங்கள் கிடைக்கும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.