UPDATED : மே 15, 2026 05:53 PM
ADDED : மே 15, 2026 05:41 PM
பொள்ளாச்சி: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் கிராமப்புற விவசாய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டடு, 20 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்தது.
கடந்தாண்டு டிச., மாதம் வி.பி. - கிராமம்(ஜி) என்ற புதிய திட்டத்தை நடப்பாண்டு ஏப். மாதம் முதல் நாடு முழுவதும் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஒரு மாதம் முடிந்தும், இத்திட்டம் துவங்கப்படாததால் கிராமப்புற மக்கள் வேலை இல்லாமல் பரிதவிக்கின்றனர்.
பயனாளிகளின் கருவிழியை படம் பிடிப்பது, ஆன்லைன் பதிவு என அறிவித்து ஏழை மக்களை மேலும் கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்காததால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.
எனவே, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும். புதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும். வீட்டு மனைப்பட்டா கோரி மனு கொடுத்துள்ள அனைத்து வீடு, நிலமற்ற ஏழை மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
