/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிதிலமடைந்த வேலாயுதசுவாமி கோவில் புனரமைக்க வலியுறுத்தல்
/
சிதிலமடைந்த வேலாயுதசுவாமி கோவில் புனரமைக்க வலியுறுத்தல்
சிதிலமடைந்த வேலாயுதசுவாமி கோவில் புனரமைக்க வலியுறுத்தல்
சிதிலமடைந்த வேலாயுதசுவாமி கோவில் புனரமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 02, 2025 10:45 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, பழமை வாய்ந்த வேலாயுதசுவாமி கோவில் போதிய பராமரிப்பின்றி, கருவறை உட்பட கட்டுமானங்கள் சிதிலமடைந்துள்ளன. கோவிலை புனரமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், பல்வேறு கோவில்கள் கட்டப்பட்டன. கோவிலில், நித்ய பூஜை செய்யவும், பராமரிப்புக்கும், பூஜைக்கு தேவையான பொருட்களுக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன.
மேலும், பூஜை செய்பவர்களின் வாழ்வாதாரத்திற்காக அப்போதைய ஆட்சியாளர்களால், நிலங்கள் வழங்கப்பட்டன. காலப்போக்கில், நிலங்கள் உள்ள கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்படவில்லை.
இதனால், பல கோவில்களில் ஒரு கால பூஜையே நடைபெறாமல் பூட்டி கிடக்கின்றன. அந்த பட்டியலில், பொள்ளாச்சி அருகே பழமை வாய்ந்த கோவிலும் இணைந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே, ஆவலப்பம்பட்டியில் பழமை வாய்ந்த வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. மூலவராக வேலாயுதசுவாமி வேலுடன் காட்சியளிக்கிறார். அருகில் விநாயகர் சிலையும் உள்ளது. கோவில் முன் வேல் அமைந்துள்ளது.
ஹிந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில், ஒரு கால பூஜை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் கோவில் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.
மூலவர் சன்னதி மேற்கூரை பழங்கால அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்தின் முகப்பு பகுதி மேற்கூரை இல்லாமல் உள்ளது. கோபுரமும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களை சிலர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
பழமையான கோவிலை புனரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.
பராமரிப்பில்லை பொதுமக்கள் கூறியதாவது: பழமை வாய்ந்த வேலாயுதசுவாமி கோவிலில் பூஜைகள் நடைபெற்றன. காலப்போக்கில் கோவிலில் போதிய பராமரிப்பின்றி மாறியுள்ளது.கோவில் கோபுரம், கட்டடம் முற்றிலும் சிதிலமடைந்துள்ளன. கோவில் முகப்பு கட்டடம் எப்போது வேண்டுமென்றாலும் விழக்கூடிய அபாயத்தில் உள்ளது. தனியார் தோட்டம் வாயிலாகத்தான் கோவிலுக்கு செல்லும் வழித்தடம் உள்ளது. கோவிலுக்கான வழித்தடம் தனியாக ஏற்படுத்தப்படாமல் உள்ளது.கோவிலை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என, ஹிந்துசமய அறநிலையத்துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கோவில் பெயர், ஊர் பெயர் மட்டும் இணையதளத்தில் உள்ளது. கோவில் விபரம், 'நாட் பவுன்ட்' என தெரிவிக்கப்படுகிறது.
வேறு இணையதளத்தில் தகவலை தேடினால், 19ம் நுாற்றாண்டு கோவில், ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ளது என்ற தகவல்கள் மட்டுமே வருகின்றன.கோவிலை பராமரிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தாலும் எவ்வித பலனும் இல்லை.
பழமை வாய்ந்த கோவில்கள், வரலாற்றை உணர்த்தும் ஒரு அற்புதமான பொக்கிஷமாக கருதப்படுகிறது. அந்த வகையில், பழமையை இழக்காமல், புனரமைத்து பாதுகாக்க இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
அரசுக்கு கருத்துரு ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நலிவடைந்த, 500 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், ஆவலப்பம்பட்டி வேலாயுதசுவாமி கோவில் இடம் பெற்றுள்ளது. புனரமைக்க, 17.5 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டதும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.