துணிப்பை பயன்படுத்துங்க துண்டுப்பிரசுரம் விநியோகம்
துணிப்பை பயன்படுத்துங்க துண்டுப்பிரசுரம் விநியோகம்
ADDED : ஆக 22, 2026 04:39 AM
அன்னுார்: அன்னுார் பேரூராட்சி சார்பில், அன்னுார் பிரதான சாலை, சத்தி சாலை மற்றும் கோவை சாலையில், 50க்கும் மேற்பட்ட கடைகளில், பேரூராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தடை செய்யப்பட்ட, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய, 4 கிலோ 600 கிராம் எடையுள்ள பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 10 கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அடுத்த முறை மீண்டும் பிடிபட்டால் அபராதம் இரட்டிப்பாகும்; தொடர்ந்து பயன்படுத்தினால் 'சீல்' வைக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து, சுகாதார அலுவலர் ராஜ்குமார், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பிரதீப், சின்னச்சாமி ஆகியோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தனர்.
பிளாஸ்டிக் பைகளுக்கு பதில், துணி மற்றும் சணல் பை பயன்படுத்தலாம். எவர்சில்வர் கண்ணாடி மற்றும் காகித டம்ளர்களை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் தட்டுக்களுக்கு பதில் பாக்கு மட்டை, தாமரை இலை, மந்தாரை இலை தட்டுகளை பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் உறிஞ்சு குழலுக்கு பதில், காகிதத்தால் ஆன உறிஞ்சு குழல் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
