சர்வீஸ் ரோட்டை பயன்படுத்தினால் விபத்து தவிர்க்கலாமே!
சர்வீஸ் ரோட்டை பயன்படுத்தினால் விபத்து தவிர்க்கலாமே!
UPDATED : நவ 10, 2026 06:23 PM
ADDED : நவ 10, 2026 05:17 PM

கோவை: கோவை - அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ.க்கு மேம்பாலம் கட்டியிருந்தாலும் சாலை மார்க்கமாக வாகன போக்குவரத்து குறையவில்லை. பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகளுக்குச் செல்வோர் சாலையையே பயன்படுத்துகின்றனர். அனைத்து விதமான பஸ்களும் சாலை மார்க்கமாகவே செல்வதால், வாகன போக்குவரத்து அதிகமாகவே இருக்கிறது.
ஏறு தளம், இறங்கு தளம் மற்றும் 'யூ டேர்ன்' பகுதியில் வாகனங்கள் கடப்பதால் சிரமம் இருக்கிறது. இறங்கு தளம் அமைந்துள்ள இடங்களில் வாகனங்கள் வேகமாக செல்வதை தவிர்க்க, ரப்பர் வேகத்தடை அமைக்கப்பட்டது.
அதிகமான வாகனங்கள் சென்றதால், வேகத்தடை சேதமடைந்து விட்டது. இதனால் இப்பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பஸ் ஸ்டாப் அமைந்துள்ள இடங்களில் பாதசாரிகள் ரோட்டை கடக்க கஷ்டப்படுகின்றனர்.
கொடிசியா ரோட்டில் இருந்து அவிநாசி ரோட்டுக்கு வருவோர் ஹோப் காலேஜ் நோக்கிச் செல்வதற்கு. சற்று துாரத்தில் 'யூ டேர்ன்' விடப்பட்டுள்ளது. அதேபோல், சிட்ராவில் இருந்து வருவோர் காளப்பட்டி ரோட்டுக்குச் செல்ல அதற்கு முன்னதாக 'யூ டேர்ன்' விடப்பட்டிருக்கிறது. சிட்ராவில் இருந்து நேராகச் செல்வோர் அதிவேகமாக பயணிப்பதால் கொடிசியா ரோட்டில் இருந்து வருவோர் திரும்பும்போது விபத்தில் சிக்குகின்றனர்.
பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரியில் இருந்து சி.ஐ.டி. கல்லுாரி வரை சர்வீஸ் ரோடு இருக்கிறது. பி.எஸ்.ஜி. கல்லுாரி அருகே கார், பஸ் செல்லும் அளவுக்கு இந்த ரோடு அகலமாக இருக்கிறது. அரசு பாலிடெக்னிக் கல்லுாரியை கடந்ததும் சுருங்கி விடுகிறது.
சி.ஐ.டி. கல்லுாரி அருகே சிறிதளவே இடமிருக்கிறது. இப்பகுதியில் தார் ரோடு போடாமல் விடுபட்டிருக்கிறது. சர்வீஸ் ரோட்டுக்கு எவ்வளவு அகல ரோடு இருக்க வேண்டும் என்பதை அளவீடு செய்து, தார் ரோடு போட வேண்டும்.
ஜி.டி.நாயுடு மேம்பாலம் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியில் ரூ.200 கோடி மீதமிருக்கிறது. அத்தொகையில் சிறிதளவு ஒதுக்கி, தார் ரோடு போட்டு, சிட்ராவில் இருந்து ஹோப் காலேஜ் நோக்கி நேராகச் செல்வோரை சர்வீஸ் ரோட்டில் அனுப்பினால், பிரதான சாலையில் போக்குவரத்து குறையும். 'யூ டேர்ன்' பகுதியில் வாகனங்கள் திரும்பும்போது, விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம்.
