/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைத்துறையில் காலி பணியிடங்கள்; விரைவாக நடவடிக்கை எடுக்கணும்
/
கால்நடைத்துறையில் காலி பணியிடங்கள்; விரைவாக நடவடிக்கை எடுக்கணும்
கால்நடைத்துறையில் காலி பணியிடங்கள்; விரைவாக நடவடிக்கை எடுக்கணும்
கால்நடைத்துறையில் காலி பணியிடங்கள்; விரைவாக நடவடிக்கை எடுக்கணும்
ADDED : ஜூலை 30, 2025 07:58 PM

வால்பாறை; கால்நடைத்துறையில் காலிப்பணியிடங்களால் கால்நடைகள் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை நகரில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடை உதவி மருத்துவ அலுவலகம் செயல்படுகிறது. வால்பாறையில், 20 ஆண்டுகளுக்கு முன், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இருந்தன.
ஆனைமலை புலிகள் காப்பகமாக மாறிய பின் கால்நடைகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது, 1,750 கால்நடைகள் (ஆடு, மாடு, நாய்) இருப்பதாக கால்நடைத்துறை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், வால்பாறையில் செயல்படும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் உதவி கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர் என மூன்று பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் கடந்த ஓராண்டுக்கு மேலாக காலியாகவே உள்ளன.
தொழிலாளர்கள் கூறியதாவது: தேயிலை தோட்டத்தில் வளர்க்கும் கால்நடைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பல கி.மீ., துாரம் நடந்து வரவேண்டியுள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் மருத்துவமனையில் யாருமே இருப்பதில்லை.
ஆரம்ப காலத்தில் டாக்டர்கள் வீடு தேடி வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக யாரும் வருவதில்லை. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறையில் பணிபுரிந்த உதவி மருத்துவர் தற்போது விடுப்பில் உள்ளார். மாற்று பணியில் வரும் வாரத்தில் இரண்டு நாட்கள் கோட்டூரிலிருந்து கால்நடை உதவி மருத்துவர் வந்து செல்கிறார். பிற நாட்களில் பொள்ளாச்சியிலிருந்து மாற்று பணியில் பணியாளர்கள் வருகின்றனர். காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்படுவர்,' என்றனர்.