/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலியிடம் 75; அழைப்பு 15 சத்துணவு வழங்குவதில் தொடருது சிக்கல்
/
காலியிடம் 75; அழைப்பு 15 சத்துணவு வழங்குவதில் தொடருது சிக்கல்
காலியிடம் 75; அழைப்பு 15 சத்துணவு வழங்குவதில் தொடருது சிக்கல்
காலியிடம் 75; அழைப்பு 15 சத்துணவு வழங்குவதில் தொடருது சிக்கல்
ADDED : ஏப் 23, 2025 12:08 AM
அன்னுார்,; அன்னுார் ஒன்றியத்தில், 75 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 15க்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்னுார் ஒன்றியத்தில், ஒரு பேரூராட்சி, 21 ஊராட்சிகளில், 75 துவக்க பள்ளிகள், 16 நடுநிலைப் பள்ளிகள், மூன்று உயர்நிலைப் பள்ளிகள், ஆறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இவற்றில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு முட்டையுடன் சத்துணவு வழங்கப்படுகிறது.
மையங்களில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகிய மூன்று பணியிடங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பணியில் இருந்து ஓய்வு பெறுதல், இறப்பு உள்ளிட்ட காரணங்களால் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இதனால், ஒவ்வொரு அமைப்பாளரும் இரண்டு மையங்களுக்கு சென்று பொருட்கள் வாங்குதல், சமையலருக்கு விநியோகித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
சமையலரும் இரண்டு மையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் ஏழை மாணவ, மாணவியருக்கு சத்துணவு வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என சத்துணவு ஊழியர் சங்கம் பல ஆண்டுகளாக கோரி வந்தது.
இந்நிலையில், அன்னூர் ஒன்றியத்தில் 15 மையங்களில் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவித்துள்ளார். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி பெறாத பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மையத்திலிருந்து 3 கி.மீ., சுற்றளவுக்குள் வசிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'முக்கியமாக சமையலர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும். இத்துடன் அமைப்பாளர் பணியிடமும் நிரப்ப வேண்டும். 75 பணியிடங்கள் அன்னுார் ஒன்றியத்தில் காலியாக உள்ளன. ஆனால் வெறும் 15 பணியிடங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளனர்.
அரசு அனைத்து காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். அப்போதுதான் மாணவ மாணவியருக்கு தொய்வில்லாமல் சத்துணவு வழங்க முடியும்,' என்றனர்.

