/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம்
/
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம்
ADDED : ஜன 11, 2025 09:20 AM

கோவை புறநகர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர்
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, சூலூர் திருவேங்கடநாத பெருமாள் கோவில், கள்ளப் பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், கலங்கல் கல்யாண வெங்கட்ரமண சுவாமி பெருமாள், கருமத்தம்பட்டி ஸ்ரீ கரிய மாணிக்க பெருமாள் கோவிலில் அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சொர்க்கவாசல் திறப்பின் போது, பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என, சரண கோஷத்துடன் பெருமாளை தரிசித்தனர்.
இதேபோல், செங்கத்துறை ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெ.நா.பாளையம்
சின்னதடாகம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பூதேவி, ஸ்ரீதேவி சமேத கரி வரதராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பன்னிமடை கிருஷ்ணசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில் காலை, 5:30 மணிக்கு பெருமாள் தாயார்களுடன் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சிறப்பு பஜனை, பூஜைகளுடன் சேஷ வாகனத்தில் பெருமாள் தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதே போல இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
அன்னூர்
அன்னூர் மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில், அதிகாலை 4:00 மணிக்கு அபிஷேக பூஜை, காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் நடந்தது. பழமையான ஓரைக்கால்பாளையம், ராம வரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும், இதையடுத்து பஜனை உடன் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.
காட்டம்பட்டி ஊராட்சி, வரதையம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் பெருமாளுக்கு 27 வகையான அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு பஜனை உடன் சுவாமி திருவீதி உலாவும், நடந்தது.
அன்னூரில், 300 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது. அதிகாலை 3:00 மணிக்கு அபிஷேக பூஜையும், காலை 5:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. காலை 5:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தி கோஷம் எழுப்பியபடி பல ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசித்தனர்.
அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், விழா அமைப்பாளர் கே.ஜி. ராமசாமி, அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.
ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக கரிவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பெருமாள் திருவீதியுலா தேரோடும் வீதியில் நடந்தது.
-நமது சிறப்பு நிருபர்-