/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் விழாவில் வள்ளிக்கும்மி அரங்கேற்றம்
/
பொங்கல் விழாவில் வள்ளிக்கும்மி அரங்கேற்றம்
ADDED : ஜன 15, 2024 10:14 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் நடந்த பொங்கல் விழாவில், அன்னை பவானி வள்ளிக்கும்மி அரங்கேற்றம் நடந்தது.
மேட்டுப்பாளையத்தில், கொங்கு நாட்டின் பாரம்பரிய, தமிழர் குடும்ப பொங்கல் விழா மற்றும் அன்னை பவானி வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா, நேஷனல் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு முன்னாள் டி.எஸ்.பி., நாச்சிமுத்து, பொன்னுசாமி, ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். திருமூர்த்தி வரவேற்றார். விழாவில் அன்னை பவானி வள்ளி கும்மி அரங்கேற்றம் நடந்தது.
இதில் கும்மியாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.பயிற்சி பெற்ற, 60 மகளிர் மற்றும் சிறுவர்கள் பங்கேற்றனர். வள்ளிக்கும்மியை பயிற்றுநர் பாலு துவக்கி வைத்தார். பயிற்று ஆசிரியைகள் தாரணி, ஷாமிலா ஆகியோர் பாடல்களை பாடினர். பொங்கல் விழாவில், ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்களுக்கு தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
மேலும், 10 மற்றும், 12ம் வகுப்பில், 95 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற, மாணவ, மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. விழாவில் எம்.எல்.ஏ., ஈஸ்வரன், வக்கீல் ராஜேந்திரன் மற்றும் பலர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகளை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சிகளை தேவேந்திரன் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை சம்பத்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். விழாவில் மஞ்சுநாதன் குழுவினரின் வழக்காடு மன்றம் நடைபெற்றது. விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். வெள்ளிங்கிரி நன்றி கூறினார்.