/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் வி.சி., பிரமுகர் கோவணம் கட்டி போராட்டம்
/
கோவையில் வி.சி., பிரமுகர் கோவணம் கட்டி போராட்டம்
ADDED : பிப் 12, 2024 11:25 PM

கோவை: ஆதிதிராவிட மக்களுக்கு இலவச பட்டா வழங்காததை கண்டித்து, கோவை கலெக்டர் அலுவலகம் முன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலர் சுசி கலையரசன், திருவோடு ஏந்தி, கோவணம் கட்டி நேற்று போராட்டம் நடத்தினார்.
தொடர்ந்து தன் கட்சியினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி., இத்தகைய போராட்டத்தில் ஈடுபடுவதைக் கண்டு, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
சுசி கலையரசன் கூறியதாவது: ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி, பலமுறை மனு கொடுத்து விட்டோம். விசாரணை நடத்தியும் பட்டா வழங்கவில்லை. கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ கோரினோம்; கேட்கவில்லை. பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து, வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டோம். எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. பட்டா வழங்குவது தொடர்பாக, டி.ஆர்.ஓ., எங்களை சந்திக்க விரும்புவதில்லை.
ஏழை, எளிய மக்களுக்கு பட்டா கொடுக்க, 2022ல் கலெக்டராக இருந்த சமீரன் உத்தரவிட்டு, விசாரணை நடத்தி, அறிக்கை கொடுத்திருக்கிறார். ஆனால், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார்களை சந்தித்து முறையிட்டும் செவி சாய்க்கவில்லை.
தி.மு.க., ஆட்சிக்கு அவப்பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக, இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தோம். இது, ஆட்சிக்கு எதிரான போராட்டம் அல்ல; அதிகாரிகளுக்கு எதிரானது.
இவ்வாறு அவர் கூறினார். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக, ஒன்பது பெண்கள் உட்பட 21 பேரை, போலீசார் கைது செய்தனர்.