/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வியாபாரிகள் வராததால் காய்கறி விலை குறைந்தது
/
வியாபாரிகள் வராததால் காய்கறி விலை குறைந்தது
ADDED : ஏப் 14, 2025 04:37 AM
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விடுமுறையையொட்டி, வியாபாரிகள் வராததால், காய்கறி விலை குறைந்தது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், சுமார், 25,000 ஏக்கர் பரப்பளவில், விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு, தக்காளி, சின்னவெங்காயம், மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவை, முக்கிய பயிராக பயிரிட்டு வருகின்றனர்.
விவசாயிகள், தங்களின் விளைபொருட்களை, தொண்டாமுத்தூர் மற்றும் பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.
கோவை மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து, மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.
காய்கறிகள் விலை வெகுவாக குறைந்தது. பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்றுமுன்தினம், 14 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் தக்காளி, 300 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று, வியாபாரிகள் வராததால், ஒரு டிப்பர் தக்காளி, 180 முதல் 250 ரூபாய்க்கு விற்பனையானது.
ஒரு கிலோ சின்ன வெங்காயம், 35 ரூபாய்க்கும், கத்தரி, 50 ரூபாய்க்கும், வெண்டை, 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய், 30 ரூபாய்க்கும், முட்டைகோஸ், 6 ரூபாய்க்கும், அவரை, 110 ரூபாய்க்கும், பாகற்காய், 50 ரூபாய்க்கும், முள்ளங்கி, 20 ரூபாய்க்கும், புடலங்காய், 25 ரூபாய்க்கும், ஒரு கட்டு கொத்தமல்லி, 12 ரூபாய்க்கும் விற்பனையானது.
தமிழ் புத்தாண்டு தினமான இன்று, வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள் என்பதால், இன்று காய்கறி விலை உயர வாய்ப்புள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

