ADDED : அக் 04, 2024 11:42 PM

கோவை : வடகிழக்கு பருவமழை துவங்கி இருப்பதால், தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ, 35 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, நேற்று 75 ரூபாய் ஆக உயர்ந்தது.
கோவை காய்கறி மார்க்கெட்டுக்கு, நீலகிரி, ஆலாந்துறை, உடுமலை, ஒட்டன்சத்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து, தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த மாதம் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த வாரம் தக்காளி விலை கடுமையாக விலை உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக விளைச்சல் குறைந்து இருப்பதால், கோவை காய்கறி மொத்த மார்க்கெட்டில் கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கும், சில்லரை விலையில் 70 முதல் 75 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
கோவை காந்திபுரம் 8ம் நம்பர் மார்க்கெட் காய்கறி வியாபாரி மைக்கேல் கூறியதாவது:
காய்கறி விளைச்சல் அதிகரிக்கும் போது, விலை குறையும். விளைச்சல் இல்லாத போது உயரும். தக்காளி மற்றும் வெங்காயம் விலை ஏற்ற, இறக்கத்துக்கு இதுதான் காரணம். இப்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. அதனால் தக்காளி உற்பத்தி அதிகம் இருக்காது.
தீபாவளி வரை தக்காளி விலை குறைய வாய்ப்பு இல்லை. இது புரட்டாசி மாதம், நவராத்திரி பண்டிகை காலம் என்பதால் அசைவம் சாப்பிடுபவர்கள் கூட, சைவம்தான் சாப்பிடுகின்றனர். அதனால் எல்லா காய்கறியும், 10 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.